லாரியில் கடத்திய ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


லாரியில் கடத்திய ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jun 2020 4:29 AM GMT (Updated: 11 Jun 2020 4:29 AM GMT)

டெல்லியில் இருந்து நெல்லைக்கு சேலம் வழியாக லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

டெல்லியில் இருந்து சேலம் வழியாக நெல்லைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மாநகர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் நேற்று காலை கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் அரிசி, மரம் அறுக்கும் இரும்பு பிளேட்டுகள் அதற்கு மேல் மரக்கட்டைகளை அடுக்கி வைத்து மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரி மற்றும் 100 மூட்டை புகையிலை பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் இருந்த டிரைவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட டிரைவரிடம் போலீஸ் துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் டிரைவர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 27) என்பதும், டெல்லியில் இருந்து சேலம் வழியாக நெல்லைக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். இதில் லாரியில் இருந்து தப்பி ஓடிய மற்றொரு டிரைவர் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும், லாரி உரிமையாளர்கள் சங்ககிரியை சேர்ந்த ராஜேந்திரன் (50), அவருடைய தம்பி சக்திவேல் (41) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சூர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, ‘லாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சேலம் வழியாக நெல்லைக்கு குணசேகரன் என்பவருக்கு கொண்டு செல்லப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குணசேகரன் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Next Story