சிறையில் இருந்து சசிகலா அடுத்த ஆண்டு விடுதலையாக வாய்ப்பு திவாகரன் பேட்டி
சிறையில் இருந்து சசிகலா அடுத்த ஆண்டு விடுதலையாக வாய்ப்பு உள்ளது என திவாகரன் கூறினார்.
மன்னார்குடி,
சிறையில் இருந்து சசிகலா அடுத்த ஆண்டு விடுதலையாக வாய்ப்பு உள்ளது என திவாகரன் கூறினார்.
திவாகரன் பேட்டி
அண்ணா திராவிடர் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா வைரசால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் பழைய முறைகளை விடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும். இதற்கு தேவையான கணினி, செல்போன் ஆகியவற்றை மிக தரமானதாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு அரசு உயர் தரமான ஆண்ட்ராய்டு செல்போனை இலவசமாக வழங்க வேண்டும்.
தனி செயலி
இணையதள வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் தவறான இணைய பக்கங்களுக்கு செல்வதை தடுக்க கல்வி கற்பதற்கு ஏதுவான தனி செயலிகளை உருவாக்கி பாதுகாப்பான இணையதள வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.
ஒருவருக்கு கொரோனா வருவதற்கு முன்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தான் அரசு கூறிவருகிறதே தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க, சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் என்ன? என்பதை கூறவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சசிகலாவை ஏற்றுக்கொள்வார்கள்
சசிகலா அடுத்த ஆண்டு விடுதலையாக வாய்ப்புள்ளது. அவர் சிறையில் இருந்து வெளிவரும்போது அவருக்கான அரசியல் தளம் தமிழகத்தில் இருக்குமா? என்பது சந்தேகம் தான். சசிகலாவின் நலனுக்காக நான் தினந்தோறும் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகிறேன்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரை சுற்றி நின்ற ஒரு கூட்டம் அதை தடுத்து விட்டது. சாலையில் சென்றவர்களை எல்லாம் பெரிய பதவிகளில் அமர வைத்தவர் சசிகலா. சில சுயநல அரசியல்வாதிகளை தவிர அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை ஏற்றுக்கொள்வார்கள்.
தீபா-தீபக்
அ.தி.மு.க.வுக்கு இக்கட்டான சூழல் வந்தபோதெல்லாம் நானும், சசிகலாவும் சேர்ந்து நிலைமையை சீர்படுத்தி உள்ளோம். அ.தி.மு.க.வுக்கும், மன்னார்குடிக்கும் இடையே அசைக்க முடியாத பிணைப்பு உள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது.
11 எம்.எல்.ஏ.க்கள் குறித்து முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட்டு சபாநாயகரை அறிவுறுத்தியும், அவர் முடிவெடுக்காதது தவறான செயல் ஆகும். போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்கள், கோர்ட்டு அறிவித்தது போல் தீபா, தீபக் ஆகிய இருவரையுமே சாரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இளைஞரணி செயலாளர் ஜெய் ஆனந்த், மருத்துவர் அணி செயலாளர் ராஜாவெங்கடேஷ், திருவாரூர் மாவட்ட செயலாளர் இளந்தமிழன், மன்னார்குடி நகர செயலாளர் பாஸ்கரன், மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story