பொறையாறு அருகே பருத்தி செடிகளில் வெட்டுக்கிளி தாக்குதல்; விவசாயிகள் கவலை வேளாண்மை அதிகாரி ஆய்வு
பொறையாறு அருகே பருத்தி செடிகளை வெட்டுக்கிளி தாக்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார்.
பொறையாறு,
பொறையாறு அருகே பருத்தி செடிகளை வெட்டுக்கிளி தாக்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார்.
வெட்டுக்கிளி தாக்குதல்
பொறையாறு அருகே திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமத்தில் 70 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சதீஸ் என்பவர் இயற்கை முறையில் 10 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்திருந்தார். இவர் சாகுபடி செய்த பருத்தி செடிகளில் உள்ள இலைகள், பூக்கள், காய்களை வெட்டுக்கிளிகள் தாக்கி சேதப்படுத்தியது. அடுத்தமாதம் பருத்தி அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் போது வெட்டுக்கிளிகள் தாக்கியதால் மகசூல் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மை துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த செம்பனார்கோவில் வட்டார துணை வேளாண்மை அலுவலர் உமாபசுபதி தலைமையில் உதவி வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் பாலூர் கிராமத்திற்கு வந்து வெட்டுக் கிளி தாக்குதலால் சேதமடைந்த பருத்தி செடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அச்சப்பட தேவையில்லை
இதுகுறித்து செம்பனார்கோவில் வட்டார துணை வேளாண்மை அலுவலர் உமாபசுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
அகார்டிராக்டின் மருந்து கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மில்லி கலந்து தெளித்தால் வெட்டுக்கிளிகள் அழிந்து விடும். பருத்தி செடியை தாக்கிய வெட்டுக்கிளிகள் உள்ளூர் ரக வெட்டுக்கிளிகள் தான். எனவே விவசாயிகள் அச்சப்படதேவையில்லை. செம்பனார்கோவில் வட்டார பகுதிகளில் 1,110 எக்டேர் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தொடங்கி உள்ளது என்று தெரிவித்தார்.
அப்போது நெல் ஜெயராமன் இயற்கை விவசாய சங்க தலைவர் பரணி, செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story