கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களின் ஊழியர்கள் உள்பட ராமநாதபுரத்தில் 4 பேருக்கு கொரோனா


கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களின் ஊழியர்கள் உள்பட   ராமநாதபுரத்தில் 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jun 2020 10:44 AM IST (Updated: 11 Jun 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ஊழியர்கள் உள்பட ராமநாதபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்த 38 வயது நபருக்கும், ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த 50 வயது நபருக்கும், பரமக்குடி ஜீவா நகரை சேர்ந்த 34 வயது நபருக்கும், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பகுதியை சேர்ந்த 31 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பட்டணம்காத்தான் 50 வயது நபர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்குமுன் சென்னையில் இருந்து பணிமாறுதலாகி வந்த நிலையில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, பரமக்குடியை சேர்ந்த நபரும், கலெக்டர் அலுவலக பகுதியை சேர்ந்த பெண்ணும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கனவே அங்கு பணியாற்றிய தாசில்தாருக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது இவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தாரை தொடர்ந்து இதுவரை 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பு நடவடிக்கை

நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தில் நேற்று காலை முதல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கலெக்டர் அலுவலக வளாக பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story