கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் 400 இடங்களில் நடைபெற்றது
கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 400 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்,
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் கோவில்களை திறந்து பொதுமக்கள் வழிபாடு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு கோவில்களை இதுவரை திறக்க அனுமதி வழங்கவில்லை. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து மனஅமைதி பெறும் இடமாக கோவில்கள் உள்ளன. எனவே கோவில்களை உடனடியாக திறந்து பொதுமக்கள் வழிபடுவதற்கு அனுமதிக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் கோவில்கள் முன்பு ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் பெருமாள் கோவில் முன்பு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம் நடைபெற்றது. கோவில்களை தமிழக அரசு உடனடியாக திறக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். மாநில செயலாளர் கிஷோர்குமார் உள்பட 5 பேர் பங்கேற்றார்கள். இவர்கள் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும்
போராட்டம் குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு கோவில்களை திறக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடவுள் நம்பிக்கை இல்லாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி கோவிலுக்கு சென்று வருகிறார். இன்றைய முதல்-அமைச்சரின் குடும்பத்தினர் மாதம் ஒரு யாகம் நடத்துகிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட கடவுளை நம்புகிறார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
மக்கள் தங்களுக்கு எதுவும் காரியம் நடக்க வேண்டும் என்றால் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். டாஸ்மாக், ஓட்டல்களை அரசு திறக்கிறது. ஆனால் தமிழக அரசில் நாத்திக சிந்தனையுள்ள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்கள் மூலமாக கோவில்களை திறக்கவில்லை. தமிழக அரசு பொதுமக்களின் வழிபாட்டுக்காக கோவில்களை திறக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்மிக பெரியோர்கள், மடாதிபதிகளை இணைத்து இந்துமுன்னணி தெருத்தெருவாக இந்த அரசின் நம்பிக்கையற்ற தன்மையை மக்களிடம் கொண்டு செல்லும். வரும் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று அரசை இந்து முன்னணி எச்சரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 400 கோவில்களுக்கு முன்பு இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் நடைபெற்றது.
அவினாசி-நல்லூர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று இந்து முன்னணி சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கேசவன் தலைமையில் அவினாசி லிங்கேசுவரர் கோவில் முன்பு நிர்வாகிகள் ஒற்றை காலில் நின்றபடி மதுக்கடைகள் திறந்து இருக்கும் போது கோவிலையும் திறக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
இதே போல் அவினாசி வீர ஆஞ்சநேயர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில் காசி விநாயகர் கோவில், பொன் சோழீசுவரர் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கோவில்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூரில் இந்து முன்னணி கிழக்கு ஒன்றியம் சார்பில் மாநகர மாவட்ட துணைத்தலைவர் பிடெக்ஸ் பாஸ்கரன் தலைமையில் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவில், முன்பு இந்து முன்னணியினர் ஒற்றை காலில் நின்று காவி கொடியை ஏந்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கோவில்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பல்லடம்
பல்லடத்தில் இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்து கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15 இடங்களில் நடந்த இந்தப் போராட்டத்தில் கோவில் களை உடனடியாக திறந்து, பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
பல்லடம், அண்ணாநகர், வடுகபாளையம், பொங்காளியம்மன் கோவில், அய்யப்பன் கோவில், அங்காளம்மன் கோவில், பிளாக் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் உள்ள கோவில்கள் முன்பு இந்து முன்னணி நிர்வாகிகள் கவியரசன், ஹரிஹரன், யோகேஷ் மற்றும் பிரமுகர்கள் ஒற்றைக் காலில் பிரார்த்தனை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story