கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் தடையை மீறி சட்ட நகல் எரிப்பு போராட்டம்


கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் தடையை மீறி சட்ட நகல் எரிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2020 11:22 AM IST (Updated: 11 Jun 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் விவசாய சங்கத்தினர் தடையை மீறி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்த அவசர சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 10-ந் தேதி (அதாவது நேற்று) மாவட்டம் முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று காலை விவசாயிகள் சங்கத்தினர் ஒன்று திரண்டனர். அப்போது அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறினர்.

இருப்பினும் விவசாய சங்கத்தினர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமையில் தடையை மீறி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பண்ருட்டி ஒன்றிய தலைவர் குமரகுருபரன், ஒன்றிய துணைத்தலைவர் சரவணன், கணேசன், கடலூர் ஒன்றிய துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சக்கரபாணி, தயாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட 7 பேரை கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடுவீரப்பட்டில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட குழுவினர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் சட்ட நகலை எரிக்க முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் லெனின், தனசேகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் இருந்த சட்ட நகலை கைப்பற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் இளங்கோவன், விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் பொன்னம்பலம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தேசிங்கு, குமார், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் சதானந்தம் தலைமையில் விவசாயிகள் சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் காளி.கோவிந்தராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

விருத்தாசலம் பாலக்கரையில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் திடீரென கண்டன கோஷங்களை எழுப்பியபடி சட்ட நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி, விவசாய சங்கத்தினர் 5 பேரை கைது செய்தனர்.

Next Story