ஊரடங்கு விதிகளை மீறி கோவையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரியும் வாலிபர்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்
கோவையில் கடைவீதிகள் உள்பட பல இடங்களில் ஊரடங்கு விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் வாலிபர்கள் உள்பட பலர் சுற்றி வருவதால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கோவை,
சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கோவை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குறைந்து இருந்தாலும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள், வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் வெளியில் சுற்றுவது உள்பட பல காரணங் களால் மீண்டும் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
முகக்கவசம் அணிவது இல்லை
இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம் என அரசு சில தளர்வுகளை அறிவித்து உள்ளது. இந்த நிலையில் மக்கள் மிகவும் அதிகமாக கூடும் கோவையின் முக்கிய பகுதிகளில் வாலிபர்கள் உள்பட பலர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளி இல்லாமலும், ஆபத்தான முறையில் கூட்டமாக கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரானா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்களின் இந்த செயல்பாடு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்பவர்கள், கடைகள் ஓட்டல்கள் உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
அதிகாரிகள் எச்சரிக்கை
முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடாக கடை பிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
யாராவது முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். வாலிபர்கள் உள்பட அனைவரும் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
Related Tags :
Next Story