முதுமலை ஊராட்சியில் மக்கள் மறுவாழ்வு திட்ட கமிட்டி கூட்டம்


முதுமலை ஊராட்சியில்   மக்கள் மறுவாழ்வு திட்ட கமிட்டி கூட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2020 3:52 AM IST (Updated: 12 Jun 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை ஊராட்சியில் மக்கள் மறுவாழ்வு திட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

கூடலூர், 

நீலகிரி மாவட்டம் முதுமலை ஊராட்சியானது, புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ளது. இங்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பெண்ணை, நெல்லிக்கரை, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியாளம், முதுகுளி உள்பட 7 கிராமங்களை சேர்ந்த சுமார் 700 குடும்பங்களை தேர்வு செய்து, சன்னக்கொல்லி பகுதிக்கு இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 235 குடும்பங்களும், 2-ம் கட்டமாக 255 குடும்பங்களும் சன்னக்கொல்லிக்கு மாற்றப்பட்டனர். 3-ம் கட்டமாக 211 குடும்பங்கள் மாற்றப்பட உள்ளனர். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள கலெக்டர் தலைமையில் மறுவாழ்வு திட்ட கமிட்டி உருவாக்கப்பட்டது.

கணக்கு விவரங்களை பராமரிக்கவில்லை

அந்த கமிட்டியின் ஆலோசனை கூட்டம், முதுமலை ஊராட்சி அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், துணை இயக்குனர் செண்பகபிரியா, ஆர்.டி.ஓ. ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 3-ம் கட்டமாக 211 குடும்பங்களை சன்னக்கொல்லி பகுதிக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, எங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்தில் எந்தவித விவசாயமும் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. மேலும் மாற்று இடம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகை குறித்த கணக்கு விவரங்களை வனத்துறையினர் முறையாக பராமரிக்கவில்லை.

உரிய விசாரணை

சம்பந்தப்பட்டவர்களுக்கு முழுமையாக பணமும் வழங்கவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் 3-ம் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடும்பங்கள், மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் சேர போவது இல்லை என்று முதுமலை ஊராட்சி மக்கள் கூறினர். அதற்கு, உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் அனைத்து துறை அலுவலர்கள், வனத்துறையினர், முதுமலை ஊராட்சி மக்கள் கலந்துகொண்டனர். வழக்கமாக மறுவாழ்வு திட்ட கமிட்டி கூட்டங்கள் ஊட்டியில் நடத்தப்படும். ஆனால் இந்த முறை முதுமலையில் நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story