கோத்தகிரியில் சூறாவளி காற்று: விடுதியின் தகர மேற்கூரை பெயர்ந்து நடுரோட்டில் விழுந்ததால் பரபரப்பு


கோத்தகிரியில் சூறாவளி காற்று: விடுதியின் தகர மேற்கூரை பெயர்ந்து நடுரோட்டில் விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jun 2020 10:29 PM GMT (Updated: 11 Jun 2020 10:29 PM GMT)

கோத்தகிரியில் சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் விடுதியின் தகர மேற்கூரை பெயர்ந்து நடுரோட்டில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி,

கோத்தகிரி தாசில்தார் அலுவலக சாலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாணவர்கள் 60 பேர் தங்கியிருந்து, கல்வி பயின்று வந்தனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், விடுதி மூடப்பட்டு இருந்தது. அதன்பிறகு வெளியூர்களில் இருந்து கோத்தகிரிக்கு வருகிறவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் தனிமைப்படுத்துதல் மையமாக விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதி கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து, மழைக்காலத்தில் அதன் வழியே விடுதிக்குள் தண்ணீர் ஒழுகி வந்தது. இதனால் ரூ.2 லட்சம் செலவில் மேற்கூரையை பழுது பார்க்காமல், 2 அடி உயரத்தில் 40 அடி பரப்பளவுக்கு இரும்பு குழாய்கள் மற்றும் தகரத்தால் ஆன மேற்கூரைஅமைக்கப்பட்டது.

சூறாவளி காற்று

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோத்தகிரியில் சூறாவளி காற்று வீசியது. இதற்கு தாக்குபிடிக்க முடியாமல் விடுதியின் மேற்கூரை பெயர்ந்து பயங்கர சத்தத்துடன் பறந்து வந்து தாசில்தார் அலுவலக சாலையில் விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மிகவும் கனமாக இருந்த மேற்கூரைவிழுந்ததால், விடுதியில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்ததுடன், அருகே இருந்த மின்ஒயர்களும் அறுந்து கீழே விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின்வினியோகத்தை நிறுத்தி வைத்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த சாலையில் வாகனங்கள் செல்வதை தடுக்க போலீசார் இருபுறமும் தடுப்புகளை வைத்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து நேற்று கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன், தாசில்தார் மோகனா, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மேற்கூரைஅகற்றப்பட்டன. மின்ஒயர்கள் மாற்றி அமைக்கப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

Next Story