காற்றில் பறந்த சமூக இடைவெளி: அரசு பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு ஏறும் பயணிகள்


காற்றில் பறந்த சமூக இடைவெளி:   அரசு பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு ஏறும் பயணிகள்
x
தினத்தந்தி 12 Jun 2020 5:14 AM IST (Updated: 12 Jun 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் அரசு பஸ்சில் சமூக இடைவெளி இல்லாமல் முண்டியடித்துக் கொண்டு பயணிகள் ஏறியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அரசு, தனியார் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. மளிகை கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டன.

பின்னர் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தையும் 8 மண்டலங்களாக பிரித்து அதில் குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டும் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டது. அதிலும் ஒரு மண்டலத்துக்குள் மட்டுமே பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டது. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்கு செல்ல பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை.

முண்டியடித்து ஏறும் பயணிகள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தனியார் பஸ்களை இயக்க அரசு அனுமதித்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளுக்கு தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன.

அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டாலும் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதால் தங்கள் ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் முண்டியத்துக் கொண்டு ஏறுகின்றனர்.

நடவடிக்கை

இதனால் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சமூக இடைவெளி இல்லாத நிலை தொடர்ந்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், அரசு பஸ்களில் தற்போது பயணிகளுக்கு கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்படுவதில்லை. மேலும் இருக்கைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலேயே அமர வைக்கப்படுகின்றனர். இதனால் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story