புதிய தேதியை விரைவில் அறிவிப்பேன் பதவி ஏற்பு விழா நடத்த கர்நாடக அரசு அனுமதி - டி.கே.சிவக்குமார் தகவல்


புதிய தேதியை விரைவில் அறிவிப்பேன் பதவி ஏற்பு விழா நடத்த கர்நாடக அரசு அனுமதி - டி.கே.சிவக்குமார் தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2020 6:11 AM IST (Updated: 12 Jun 2020 6:11 AM IST)
t-max-icont-min-icon

பதவி ஏற்பு விழா நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், அதனால் விழாவுக்கான புதிய தேதியை விரைவில் அறிவிப்பேன் என்றும் டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் 3 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பதவி ஏற்பு விழா நடத்த கடந்த 7-ந் தேதி அவர் அரசின் அனுமதியை கேட்டார். அப்போது அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் வருகிற 14-ந் தேதி அதற்கு அனுமதி கேட்டிருந்தார்.

ஊரடங்கு கட்டுப்பாடு இருப்பதால் அனுமதி வழங்க முடியாது என்று அரசு தெரிவித்தது. இதற்கு டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதல்-மந்திரி எடியூரப்பா அரசியல் பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறார் என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பு விழாவை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று என்னுடன் செல்போனில் பேசி, நீங்கள் திட்டமிட்டபடி பதவி ஏற்பு விழாவை நடத்துங்கள், அரசு அனுமதி வழங்க உத்தரவிடுகிறேன் என்றார். அத்துடன் எடியூரப்பா தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் இதே கருத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 14-ந் தேதி பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தமாட்டேன். புதிய தேதியை முடிவு செய்து விரைவில் அறிவிப்பேன்.

நான் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை மாநிலத்தில் 10 ஆயிரம் இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளேன். ஆசாட மாதத்தில் பதவி ஏற்கக்கூடாது என்று நான் இந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்கவில்லை. நான் சில விஷயங்களை நம்புகிறேன். எனது உதவியால் தேவேகவுடா மாநிலங்களவைக்கு செல்கிறார் என்று நான் சொல்ல மாட்டேன்.

அவ்வாறு சொல்வதற்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல. எங்கள் கட்சி மேலிடம் அவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தது. தேவேகவுடா ஒரு தேசிய சொத்து. எனக்கு 40 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளது. மேல்-சபை தேர்தலில் யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலிடம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story