திருக்கடையூரில், ஊரடங்கை மீறிய விடுதிக்கு ‘சீல்’
திருக்கடையூரில் ஊரடங்கை மீறிய தனியார் தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
திருக்கடையூர்,
நாகை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்துநாள்தோறும் பக்தர்கள் வருவார்கள். இங்கு சதாபிஷேகம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா, ஆயுள் ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் தினசரி நடைபெறுவது வழக்கம்.
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இக்கோவிலில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருக்கடையூரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று திருக்கடையூர் மேலவீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஊரடங்கைமீறி 40-க்கும் மேற்பட்டவர்கள் திருமண விழாவிற்காக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றி விடுதிக்கு ‘சீல்’ வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story