கொரோனா ஊரடங்கால் திருப்பூர் மாவட்டத்தில் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நூற்பாலைகள் துணிகள் விற்பனை குறைந்ததால் தேங்கும் நூல்கள்


கொரோனா ஊரடங்கால் திருப்பூர் மாவட்டத்தில்   நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நூற்பாலைகள்   துணிகள் விற்பனை குறைந்ததால் தேங்கும் நூல்கள்
x
தினத்தந்தி 12 Jun 2020 9:09 AM IST (Updated: 12 Jun 2020 9:09 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் திருப்பூர் மாவட்டத்தில் நூற்பாலைகள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. துணிகள் விற்பனை குறைந்ததால் நூல்கள் தேக்கம் அடைந்து உள்ளன.

குடிமங்கலம், 

விவசாயத்தை பிரதானமாக கொண்ட திருப்பூர் மாவட்டத்தில் நூற்பாலைகளும் அதை சார்ந்த தொழில்களும் வளர்ச்சி அடைந்து காணப்பட்டன. மாவட்டத்தில் பருத்தி சாகுபடி அதிக அளவில் இருந்தது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மொத்த பருத்தி விற்பனை கொள்முதல் நிலையமாக திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திகழ்ந்தது. இதனால் நூற்பாலைகள் அதிக அளவில் இயங்கி வந்தன.

பருவ நிலை மாற்றம்,போதிய விலையின்மை,கூலி ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பருத்தி சாகுபடி பரப்பளவு ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இதனால் பருத்தி சாகுபடியை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டு வந்த பல நூற்பாலைகள் நலிவடைந்தன. மேலும் நூற்பாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நூற்பாலைகள்

இந்த சூழ்நிலையில் உடுமலை, பெதப்பம்பட்டி பகுதியில் இயங்கி வந்த பல நூற்பாலைகளும் இந்த சிக்கலிலிருந்து தப்பிக்க முடியவில்லை. இதனால் இந்த பகுதியிலுள்ள பல நூற்பாலைகளும் மூடப்பட்டன. தற்போது இப்பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நூற்பாலைகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்திலும் பருத்தி உற்பத்தி குறைந்ததால் தமிழகத்திற்கு தேவையான பெரும்பகுதி பஞ்சு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தே கொண்டு வரப்படுகிறது.

பல காலகட்டங்களில் பஞ்சு விலை உயரும்போது நூல் விலை உயர்வதில்லை. இந்த ஏற்ற இறக்கங்களால் நூற்பாலை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மேலும் நெருக்கடியை உருவாக்கியது. அத்துடன் பஞ்சுக்கு வரி விதிக்காமல் நூலுக்கு வரி விதிக்கப்பட்டது சிக்கலை உருவாக்கியது. மேலும் தொழிலாளர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.இதனால் பல தொழிற் சாலைகள் வடமாநில தொழிலாளர்களை கொண்டே இயங்கி வந்தன.

நூல்கள் தேக்கம்

இங்கு உற்பத்தி செய்யப்படும் நூல்கள் பெரும்பாலும் சோமனூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு நூல்களை பயன்படுத்தி துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. சோமனூர், ஈரோடு துணிகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது இந்த கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் இந்த சுழற்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போதுமே தேவைக்கு அதிகமாக 30 சதவீதம் நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நெருக்கடியான சூழலில் அவற்றை வெளி மாநிலங்களுக்கு அனுப்பமுடியாத நிலை உள்ளது.மேலும் பொருளாதார நெருக்கடியால் துணிகள் விற்பனை குறைந்துள்ளது. இதனால் துணிகள் அதிக அளவில் தேங்குவதால் துணி உற்பத்தியைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூலைக் கொள்முதல் செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூல் தேங்குகிறது.

தொழிலாளர்கள் பற்றாக்குறை

அத்துடன் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக நூற்பாலைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி விட்டனர். இதனால் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மேலும் வெளி மாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் ஊரடங்குக்கு முன் பஞ்சு கொள்முதல் செய்து இருப்பு வைத்து இருந்த நூற்பாலைகள் மட்டும் தற்போது இயங்கி வருகிறது. மானம் காக்கும் ஆடைகள் உற்பத்தி செய்யத் தேவையான நூலை உற்பத்தி செய்யும் நூற்பாலைகள் சிக்கலில் சிக்கி இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது.

இது குறித்து நூற்பாலை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

குடிமங்கலம் மற்றும் பெதப்பம்பட்டி பகுதியில் தற்போது குறைந்த தொழிலாளர்களை கொண்டு நூற்பாலைகள் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 356 கிலோ கொண்ட பஞ்சு பண்டல் ரூ.40 ஆயிரமாக இருந்தது. தற்போதைய நிலையில் பஞ்சு கொள்முதல் செய்யமுடியாத நெருக்கடியில் இருப்பதால் விலை குறித்து யோசிக்கும் நிலையே ஏற்படவில்லை. ஏற்கனவே பஞ்சு பண்டல்கள் இருப்பு வைத்துள்ள நூற்பாலைகள் மட்டுமே இயங்கி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுடன் நூற்பாலைகள் இயங்க அரசு அனுமதியளித்துள்ள போதும் பல நூற்பாலைகள் இதுபோன்ற சிக்கல்களால் இயக்கப்படாமல் உள்ளது. ஒரு பஞ்சு பண்டலில் இருந்து அதிகபட்சமாக 310 கிலோ நூல் உற்பத்தி செய்ய முடிகிறது. தற்போதைய கொரோனா பேரிடரால் பெரும்பாலான நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் தேங்கி உள்ளன. மேலும் நூற்பாலைகளை சார்ந்து இயங்கி வரும் விசைத்தறி,கைத்தறி தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால் நூற்பாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story