வேலூர் மாவட்டத்தில் கர்ப்பிணியின் தாயார் உள்பட 4 பேருக்கு கொரோனா - 25 பேர் தனிமை
வேலூர் மாவட்டத்தில் கர்ப்பிணியின் தாயார் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் உள்பட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
வேலூர்,
வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு 3-ந்தேதி அவரின் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், அந்தக் கர்ப்பிணியின் வீட்டார், கணவரின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்பட 40 பேர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டது.
அதைத்தொடர்ந்து அவரின் சளி மாதிரியைச் சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
முதல் கட்டமாக காட்பாடி வசந்தபுரத்தைச் சேர்ந்த கர்ப்பிணியின் தாய் உள்பட 6 பேரும், கர்ப்பிணியின் கணவர் உள்பட 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். தாய் உள்பட 6 பேரின் சளி மாதிரியைச் சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கர்ப்பிணியின் தாயாருக்கு (வயது 52) கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் சுகாதாரத்துறையினர் வசந்தபுரத்துக்கு சென்றனர். அங்கு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் தாயாரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரின் வீடு மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகள், வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வசந்தபுரம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப்பணியை வேலூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரசேனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் வேலப்பாடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 38 வயது ஆண், சதுப்பேரி ஸ்ரீஆண்டாள்நகரைச் சேர்ந்த சென்னையில் பணிபுரிந்த 42 வயது ஆண், சத்துவாச்சாரி 1-ம் பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. 3 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேற்கண்ட 4 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்பட மொத்தம் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் சளி மாதிரியைச் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். அவர்கள் வசித்த பகுதிகளில் வேறு யாருக்கேனும் கொரோனா அறிகுறி காணப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கர்ப்பிணியின் தாயார் உள்பட 4 பேரை சேர்த்து வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story