விழுப்புரம் மாவட்டத்தில் தபால்காரர் உள்பட 7 பேருக்கு கொரோனா


விழுப்புரம் மாவட்டத்தில் தபால்காரர் உள்பட 7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Jun 2020 9:58 AM IST (Updated: 12 Jun 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் தபால்காரர் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் நோயால் 392 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில் 333 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 56 பேர் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த 22 வயதுடைய லேப் டெக்னிசியனும், 50 வயதுடைய அவரது தந்தையும், வீடூரை சேர்ந்த 39 வயதுடையவரும், செஞ்சியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியும், காடகம்பட்டு கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய தபால்காரரும்(சென்னை சூலை மேட்டில் பணியாற்றி வருபவர்), சேமங்கலம் காலனியை சேர்ந்த 65 வயதுடைய முதியவரும், செஞ்சி அருகே காரியமங்கலத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 399 ஆக உயர்ந்துள்ளது.

Next Story