குமாரபாளையம், எருமப்பட்டியில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்


குமாரபாளையம், எருமப்பட்டியில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2020 4:59 AM GMT (Updated: 2020-06-12T10:29:36+05:30)

குமாரபாளையம், எருமப்பட்டியில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம்,

மத்திய அரசின் அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா நகல் எரிக்கும் போராட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை பகுதியில் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்புள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின்போது, மத்திய அரசு 1955-ம் ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் பொது வினியோக முறை பலப்படுத்தப்பட்டு விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைந்தனர். தற்போது அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதில் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு மற்றும் சிறு தானியங்கள் உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்களை அத்தியவசிய பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இதில் விவசாயிகள் என்ன பொருட்களை பயிரிட வேண்டும், என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பதற்கான அதிகாரத்தை வர்த்தகர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசு வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் ஒன்றிய தலைவர் ராமசாமி, செயலாளர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், கனக சண்முகம், தியாகராஜ், கூட்டுறவு சொசைட்டி இயக்குனர் வசந்தாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரப்பட்டி ஊராட்சியில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்தை கண்டித்தும், புதிய சட்டத்தை வாபஸ் பெற கோரியும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஏழை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் சதாசிவம், அன்பரசு, சாமிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story