ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்க கோரி நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
நாகர்கோவில் தொழிலாளர் துறை அலுவலகத்தை கட்டுமான தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் செல்லப்பன் தலைமையில் கட்டுமான தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன் திரண்டு திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு அரசு வழங்க உத்தரவிட்டுள்ள நிவாரண பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கால் தவித்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண உணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை 80 சதவீதம் பேருக்குகூட நிவாரணம் வழங்கப்படவில்லை. பின்னர் குமரி மாவட்டத்தில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள், பணம் கிடைக்கவில்லை என்பதால், அந்த விவரங்களை பட்டியலிட்டு உயர் அதிகாரிகளுக்கு மேல்முறையீடு செய்தோம். அதன் அடிப்படையில் பட்டியலில் உள்ள 716 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை உடனடியாக வழங்க குமரி மாவட்ட நிர்வாகம் ஆணையிட்டது.
அதன்படி தொழிலாளி வாழும் பகுதியில் இருக்கும் ரேஷன்கடைகளில் உணவு பொருட்களை ஒப்படைத்து வினியோகம் செய்திட வேண்டும். ஆனால் அதிகாரிகள், உணவு பொருட்களை நாகர்கோவில் கோணத்தில் இருக்கும் அலுவலகத்தில் தேக்கி வைத்து விட்டு, உண்ணாமலைக்கடை, அஞ்சுகிராமம், தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள தொழிலாளர்களை தொலைபேசியில் அழைத்து உங்களுடைய உணவு பொருட்களை இன்றுக்குள் (வெள்ளிக்கிழமை) பெற்றுச் செல்லுமாறு கூறி மிரட்டுகிறார்கள். அதிகாரிகள் கூறியபடி வந்தால் தொழிலாளர்களுக்கு செலவும், வீண் அலைச்சலும் ஏற்படும்.
எனவே கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உணவு பொருட்களை அரசு ஆணைப்படி ரேஷன் கடை வழியாக வழங்கிடவும், தொழிலாளியை அலைய வைத்து அரசின் திட்டத்தை மதிக்காமல் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் உணவு பொருட்களை ரேஷன் கடைகள் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story