தூத்துக்குடியில் காய்கறி, பழப்பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ரூ.1.79 கோடி மானியம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி, பழப்பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ரூ.1.79 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தி்ல் தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில், தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.1 கோடியே 79 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 140 எக்டேர் பரப்பில் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய மானியத்தில் (எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாளி, மாதுளை மற்றும் சப்போட்டா போன்றவை) விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. பாரம்பரிய வகை பழப்பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 20 எக்டேருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
கத்தரி, மிளகாய், மற்றும் தக்காளி நாற்றுகள் வாங்க ஒரு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 37 எக்டேருக்கும், பாகல், வெண்டை, புடலை, தர்பூசணி, மற்றும் சுரைக்காய் போன்ற காய்கறி பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 70 எக்டேருக்கும் மானியம் வழங்கப்பட உள்ளது.
முருங்கை சாகுபடிக்கு ஒரு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 5 எக்டேருக்கும் மற்றும் உதிரிப்பூக்கள் சாகுபடிக்கு ஒரு எக்டேருக்கு ரூ.16 ஆயிரம் வீதம் 10 எக்டேருக்கும் மானியம் வழங்கப்பட உள்ளது.
பசுமைக்குடில் அமைக்கும் விவசாயிகளுக்கு சதுர மீட்டருக்கு ரூ.467.50 வீதம் 2 ஆயிரம் சதுர மீட்டருக்கும்், நிழல்வலைக்குடில் அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.355 வீதம் 2 ஆயிரத்து 500 சதுர மீட்டருக்கும், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன் சேமிப்பு அளவு கொண்ட கிடங்குக்கு ரூ.3 ஆயிரத்து 500 வீதம் 1,500 மெட்ரிக் டன் அளவுக்கும் மற்றும் சிப்பம் கட்டும் அறை அமைக்கும் விவசாயிகளுக்கு அறை ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 10 அறைகளுக்கும் மானியம் வழங்கப்பட உள்ளது.
வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு, காய்கறி வளர்ப்பு பைகள், உயிர் உரங்கள் மற்றும் தென்னை நார் கழிவு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படும். வீட்டுத் தோட்டங்களுக்கு சொட்டுநீர்ப்பாசனம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
நிலப் போர்வை அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. தேனீப் பெட்டிகள் மற்றும் உபகரணங்களுக்கும் மானியம் வழங்கப்பட உள்ளது. மண்புழு உரப்படுக்கை அமைப்பதற்கு ஒரு உரப்படுக்கைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 6 உரப் படுக்கைகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
காய்கறி பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ஒரு எக்டேருக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் 1000 எக்டேருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் நடமாடும் விற்பனை வண்டி, அலுமினியம் ஏணி, தெளிப்பான்கள் ஆகியவையும் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், ரேஷன் கார்டு நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனுபோகச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story