காயல்பட்டினத்தில் பயங்கர தீ விபத்து சிலிண்டர் வெடித்து 5 வீடுகள் எரிந்து சேதம்
காயல்பட்டினத்தில் சிலிண்டர் வெடித்து 5 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் ரத்தினபுரி கீழ தெருவைச் சேர்ந்தவர் சமுத்திர பாண்டி. இவருடைய மகன் மணி. கட்டிட தொழிலாளியான இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கட்டுமான பணிக்கு சென்ற இடத்திலேயே தங்கி விட்டார். இதனால் அவரது வீட்டில் யாரும் இல்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மணியின் குடிசை வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, குடிசையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர்.
அப்போது அந்த குடிசையில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் சிலிண்டரின் பாகங்கள் சுமார் 100 மீட்டர் தூரம் சிதறி கிடந்தன. மேலும் பக்கத்து வீட்டில் வசித்த மணியின் சகோதர்கள் ராஜசேகர், அன்பு மற்றும் வெள்ளைச்சாமி மனைவி பாக்கியம், இருட்டிமுத்து மகன் கடற்கரைமுத்து ஆகிய 4 பேரின் வீடுகளுக்கும் தீ பரவியது.
இதில் ராஜசேகர், பாக்கியம், கடற்கரைமுத்து ஆகிய 3 பேரின் வீடுகளும் குடிசை என்பதால் தீ மளமளவென்று பரவியது. அன்புவின் கான்கிரீட் வீட்டின் கதவு, ஜன்னல்களும் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அந்த வீடுகளில் வசித்த அனைவரும் அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மணியின் வீட்டில் வெடிக்காமல் இருந்த மற்றொரு சிலிண்டரையும் பாதுகாப்பாக எடுத்து சென்று அப்புறப்படுத்தினர்.
தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த டி.வி., பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story