அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்கம் - 261 பேர் பயணம்


அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்கம் - 261 பேர் பயணம்
x
தினத்தந்தி 13 Jun 2020 4:00 AM IST (Updated: 13 Jun 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் இருந்த கோவைக்கு எக்ஸ்பிரஸ் சேவை நேற்று தொடங்கியது. இதில் 261 பேர் பயணம் செய்தனர்.

அரக்கோணம்,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமானம், ரெயில், பஸ் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக ஊரடங்கினை தளர்த்தி கொண்டது. அதைத்தொடர்ந்து இ-பாஸ் மூலம் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு நேற்று காலை 7 மணி அளவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயிலில் 261 பயணிகள் பயணம் செய்தனர்.

ரெயில் புறப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே பயணிகள் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் தங்களது இ-பாசை காண்பித்து பயணத்தை உறுதி செய்து கொண்டனர். பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைக்கு ஒருவர் என ரெயில் பெட்டிகளில் அமர்ந்தனர். அந்த ரெயிலில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிரி, வெங்கடேசன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னையில் இருந்து 75 வயதான முதியவர் ஒருவர் இந்த ரெயிலில் கோவை செல்வதற்காக நேற்று முன்தினமே அரக்கோணம் ரெயில் நிலையம் வந்து தங்கிவிட்டார். அவரை அதிகாரிகள் விசாரித்து, ரெயில் அனுப்பி வைத்தனர்.

அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் இந்த ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7.55 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையம் வந்தடைந்தது. அதில் காட்பாடியில் இருந்து 51 பயணிகள் ஏறினர். பின்னர் அந்த ரெயில் கோவையை நோக்கி புறப்பட்டு சென்றது.

Next Story