மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே உள்பட 4 பேரும் போட்டியின்றி தேர்வு


மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே உள்பட 4 பேரும் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 13 Jun 2020 5:00 AM IST (Updated: 13 Jun 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே உள்பட 4 பேரும் போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

மாநிலங்களவையில் எம்.பி.யாக இருக்கும் கர்நாடகத்தை சேர்ந்த பி.கே.ஹரிபிரசாத், ராஜீவ்கவுடா, பிரபாகர் கோரே, குபேந்திரரெட்டி ஆகியோரின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 4 இடங்களுக்கு தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் அசோக் கஸ்தி, ஈரண்ண கடாடி, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜனதா தளம்(எஸ்) சார்பில் தேவேகவுடா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சங்கமேஸ் நரகுந்து என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். கடந்த 9-ந் தேதி மனு தாக்கல் நிறைவடைந்தது.

10-ந் தேதி நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையின்போது, சுயேச்சையாக மனு தாக்கல் செய்த சங்கமேஸ் நரகுந்துவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தேவேகவுடா உள்பட 4 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். அந்த 4 பேரில் யாரும் மனுவை வாபஸ் பெறவில்லை.

இதையடுத்து பா.ஜனதா வேட்பாளர்கள் அசோக் கஸ்தி, ஈரண்ண கடாடி, காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் தேவேகவுடா ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலாளர் விசாலாட்சி அறிவித்தார்.

இதன் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த மல்லிகார்ஜுன கார்கே(கலபுரகி தொகுதி), முன்னாள் பிரதமர் தேவேகவுடா(துமகூரு தொகுதி) ஆகியோர் மாநிலங்களவைக்கு செல்வது உறுதியாகியுள்ளது. கர்நாடகத்தில் இவர்கள் 2 பேரும் மிகமுக்கிய அரசியல் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு இந்த 4 இடங்களில் காங்கிரசிடம் 2 இருந்தது. பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வசம் தலா ஒரு இடம் இருந்தது. தற்போது, பா.ஜனதாவுக்கு இரண்டும், காங்கிரசுக்கு ஒன்றும் கிடைத்துள்ளது. ஒரு இடத்தை காங்கிரஸ் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story