வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு வேலை - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
சேலம்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்றார். அதனை தொடர்ந்து எடப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கூட்டுறவுத்துறை மூலமாக 3,100 பெண்களுக்கு ரூ.10.74 கோடி கடன் உதவியை வழங்கினார். தொடர்ந்து அவர், ஊரகவளர்ச்சித்துறை மூலமாக மகளிர் திட்டத்தின் கீழ் 1,474 மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.26.8 கோடியும், ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 2,464 பெண்களுக்கு ரூ.4.62 கோடி என மொத்தம் 7038 பெண்களுக்கு ரூ.36 கோடியே 44 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சேலம் எடப்பாடி சித்தூரை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவி தமிழரசி, அவரது 2 குழந்தைகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது, அவர் 2 குழந்தைகளை படிக்க வைக்க உதவி செய்ய வேண்டும் என்றும், தனது குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார்.
இதனை கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மனுவை வாங்கிக்கொண்டு ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டார். இதற்கான நடவடிக்கையை உடனே எடுக்குமாறு அவர் கலெக்டர் ராமனிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராணுவ வீரர் மதியழகனின் மனைவி தமிழரசி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராமன், சந்திரசேகரன் எம்.பி., மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், செம்மலை எம்.எல்.ஏ., எடப்பாடி நகர்மன்ற முன்னாள் தலைவர் கதிரேசன், நகர அ.தி.மு.க. செயலாளர் முருகன், ஒன்றியக்குழு தலைவர்கள் கரட்டூர் மணி, குப்பம்மாள், ஒன்றிய செயலாளர்கள் மாதேஸ், துரை, ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜ்குமார், பாலாஜி, நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story