தேன்கனிக்கோட்டை அருகே 3 பேரை கொன்ற ஒற்றை யானை தெங்குமரஹடா வனப்பகுதியில் விடப்பட்டது


தேன்கனிக்கோட்டை அருகே 3 பேரை கொன்ற   ஒற்றை யானை தெங்குமரஹடா வனப்பகுதியில் விடப்பட்டது
x
தினத்தந்தி 13 Jun 2020 5:51 AM IST (Updated: 13 Jun 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே 3 பேரை கொன்ற ஒற்றை யானை தெங்குமரஹடா வனப்பகுதியில் விடப்பட்டது.

பவானிசாகர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று கடும் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்து வந்தது. மேலும் விவசாயிகள் 3 பேரை தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து இந்த ஒற்றை யானையை பிடிக்க வனத்துறையினர் அதன் நடமாட்டத்தை ‘டிரோன் கேமரா’ மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திம்மசந்திரம் கிராமத்தில் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானைக்கு வனத்துறை ஊழியர்கள் 2 மயக்க ஊசி செலுத்தினர். இதில் யானை மயக்கமடைந்தது. பின்னர் யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது.

சாலை மறியல்

அதன்பின்னர் கயிறுகளை கட்டி யானையை அழைத்து வந்து, வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் கிரேன் மூலம் ஏற்றினார்கள். இதையடுத்து யானையை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி யானையை லாரியில் ஏற்றி நேற்று முன்தினம் இரவு தெங்குமரஹடா சென்று கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்ததும் காராச்சிகொரை, சித்தன்குட்டை, புங்கார் காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். 3 பேரை கொன்ற யானையை தெங்குமரஹடா வனப்பகுதியில் விட எதிர்ப்பு தெரிவித்து காராச்சிகொரை வனப்பகுதி சோதனைச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்

தெங்குமரஹடாவில் விடப்பட்டது

இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் வனச்சரகர் மனோஜ் குமார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வனத்துறையினர் கூறும்போது, ‘இந்த யானை தெங்குமரஹடா அடுத்துள்ள மங்களப்பட்டி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டு, அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும் பொதுமக்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படாது’ என்றனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து யானையை லாரியில் ஏற்றி அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் யானையை லாரியில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் இறக்கி தெங்குமரஹடா வனப்பகுதியில் விட்டனர். அதைத்தொடர்ந்து யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று யானையை விட்டாலும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பீதியில் உள்ளனர்.

Next Story