நல்ல விலை கிடைக்கும் என்பதால் தஞ்சாவூருக்கு நெல் மூடைகள் கொண்டு சென்ற விவசாயி மீதான வழக்கு ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நல்ல விலை கிடைக்கும் என்பதால் தஞ்சாவூருக்கு நெல் மூடைகள் கொண்டு சென்ற விவசாயி மீதான வழக்கு ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 Jun 2020 5:59 AM IST (Updated: 13 Jun 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

நல்ல விலை கிடைக்கும் என்பதால் தஞ்சாவூருக்கு நெல் மூடைகள் கொண்டு சென்ற விவசாயி மீது பதிவான வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

திருவண்ணாமலையை சேர்ந்த ரெத்தினம் செட்டி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருவண்ணாமலை பகுதியில் உள்ள எனது சொந்த நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தேன். நெற்பயிர்களை அறுவடை செய்தபின், நெல் மூடைகளை விற்பனை செய்ய முடிவு செய்தேன். அப்போது தஞ்சாவூர் பகுதிக்கு நெல் மூடைகளை கொண்டு சென்று விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்ற தகவலை அறிந்தேன். அதன்படி எனது நிலத்தில் விளைந்த 256 நெல் மூடைகளை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு தஞ்சையை நோக்கி சென்றோம்.

அப்போது அந்த லாரியில் சந்தேகத்துக்கு இடமாக நெல் மூடைகள் கொண்டு வருவதாக தஞ்சை சேதுபாவாசத்திரம் போலீசார் எண்ணியுள்ளனர். இதையடுத்து அந்த லாரியை அவர்கள் சிறைபிடித்து சென்றனர். பின்னர் லாரியில் நெல் மூடைகளை ஏற்றி வந்தது தொடர்பாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420 உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர். நான் என்னுடைய விளைநிலத்தில் விளைந்த நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மட்டுமே தஞ்சாவூருக்கு கொண்டு சென்றேன். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. எனவே இதுதொடர்பான வழக்கை ரத்து செய்து, லாரியையும், நெல் மூடைகளையும் விடுவிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

விடுவிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் டி.ஆர்.முருகேசன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி, “விளை பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை. மனுதாரரிடம் உரிய விசாரணை நடத்தாமல் போலீசார் வழக்குபதிவு செய்தது ஏற்கத்தக்கதல்ல” என்று வாதாடினார்கள்.

விசாரணை முடிவில், இந்த வழக்கின் பலகட்ட விசாரணையில் மனுதாரர் விவசாயி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதித்தால் தான் விவசாயம் செழிக்கும். விவசாய பொருட்களுக்கு எந்த இடத்தில் நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு அவற்றை கொண்டு செல்ல எந்த தடையும் இருக்கக்கூடாது. மனுதாரர் மீது வழக்குபதிவு செய்தது வருத்தத்திற்குரிய விஷயம். விவசாயம் செய்பவர்கள் ஊக்குவிக்க வேண்டுமே தவிர, துன்புறுத்தப்படக்கூடாது. பொதுமக்களுக்கான அரிசிக்கான நெல்லை மனுதாரர் கடத்தவில்லை என்பது விசாரணையில் உறுதியாகிறது.

எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். வாடகை வாகனத்தையும், நெல் மூடைகளையும் தாமதமின்றி உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

Next Story