கொரோனாவால் வருமானம் இழந்து தவித்த மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.4 கோடி கடன் உதவி அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


கொரோனாவால் வருமானம் இழந்து தவித்த   மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.4 கோடி கடன் உதவி   அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jun 2020 8:14 AM IST (Updated: 13 Jun 2020 8:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் வருமானம் இழந்து தவித்த 197 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு நிவாரண நலத்திட்டத்தில் ரூ.4கோடியே 47லட்சம் கடன் உதவியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்கள், சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் கொரோனாவால் வருமானம் இழந்து தவிக்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு நிவாரண நலத்திட்ட கடன் உதவி வழங்கும் விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் மாவட்டத்தில் உள்ள 197 குழுக்களுக்கு ரூ.4 கோடியே 47லட்சத்து 16 ஆயிரம் கடன் உதவியை வழங்கினார். நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், துணைத் தலைவர் என்.எம். ராஜா, மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி, கூட்டுறவு வங்கி மண்டல இணை இயக்குனர் பழனீஸ்வரி, கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மஞ்சுளாபாலசந்தர், கூட்டுறவு சரக துணைப் பதிவாளர் ராஜேந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிமுத்து, கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உறுதிமொழி

முன்னதாக குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது தொடர்பான உறுதிமொழி அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் ஏற்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26,228 மதிப்பில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், எம்.எல்.ஏ. நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் சரவணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story