மதிப்பெண் கணக்கிடுவதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் வருகைப்பதிவேட்டை ஒப்படைக்கும் பள்ளிகள்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண் கணக்கிடுவதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வருகைப்பதிவேட்டை ஒப்படைத்துள்ளன.
கடலூர்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரையிலும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 4-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரையிலும் நடைபெற்றது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன் 15-ந் தேதி தொடங்கும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என ஐகோர்ட்டு கூறியதன் அடிப்படையில், தமிழக அரசு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்தது.
வருகைப்பதிவேடு
மேலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அடிப்படையிலும் வருகை பதிவேட்டின் அடிப்படையிலும் மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மாணவர்களின் வருகைப்பதிவேட்டை அந்தந்த பள்ளிக்கூடங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 18,341 மாணவர்கள், 17,205 மாணவிகள் என மொத்தம் 35,546 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு மதிப்பெண் தேவைப்படுவதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை 80 மதிப்பெண்களுக்கு மதிப்பிடுவதோடு, அவர்களின் வருகைப்பதிவேட்டை பொறுத்து மீதமுள்ள 20 மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நடவடிக்கை
இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்கு மாணவர்களை அனுப்பும் 439 பள்ளிகளும் தங்களது வருகைப்பதிவேட்டினை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க நேரம் ஒதுக்கியிருந்தோம். அதன்படி அனைவரும் மாணவர்களின் வருகை பதிவேட்டை ஒப்படைத்துள்ளார்கள். இதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும். இதற்காக வருகைப்பதிவேட்டில் ஏதாவது திருத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்போம். அவ்வாறு ஏதாவது நடந்திருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story