நாகை மாவட்டத்தில், 52 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு- கலெக்டர் பிரவீன்நாயர் தகவல்
நாகை மாவட்டத்தில் 52 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் தெரிவித்தார்.
வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே ஆயக்காரன்புலம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின்கீழ் கோவில் குளம் மற்றும் வடக்கு அய்யனார் கோவில் குளத்தில் ரூ.58,000 மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் 52 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 38 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி நடந்தது. மேட்டூர் அணைநீர் வெண்ணாறு, காவிரி, வெட்டாறு வழியாக அனைத்து பாசன வாய்க்கால்களுக்கும் சென்றடைய வசதியாக தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரசாந்த், செயற்பொறியாளர் செல்வராஜ், தாசில்தார் முருகு, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வெற்றிச்செல்வன், ராஜூ, ஊராட்சி தலைவர்கள் ராமையன், சரவணன், வீரதங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story