தஞ்சையில், கொரோனா பலி இரண்டாக உயர்வு: துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர் சாவு
தஞ்சையில் கொரோனா பலி இரண்டாக உயர்ந்துள்ளது. துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்திற்கு பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்து விட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் குணம் அடைந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து வந்த ஒருவர், கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் தஞ்சை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்த 54 வயதான இஸ்லாமியர் ஒருவர், துபாயில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சுவாச பிரச்சினை இருந்து வந்ததால் அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த மாதம் 14-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் அவர் சொந்த ஊருக்கு வர அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர், துபாய் நாட்டில் இருந்து சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்திற்கு வந்தார். இங்கே அவருக்கு கடந்த 3-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் பட்டுக்கோட்டையை சேர்ந்த 70 வயது பெண், ராஜாமடத்தை சேர்ந்த 40 வயது ஆண், 37 வயது பெண், தஞ்சை சந்திரசேகர் நகரை சேர்ந்த 43 வயது ஆண், சாலியமங்கலத்தை சேர்ந்த 58 வயது ஆண், நாச்சியார்கோவிலை சேர்ந்த 55 வயது ஆண், திருவிடைமருதூர் முள்ளங்குடியை சேர்ந்த 30 வயது ஆண், தேப்பெருமாநல்லூரை சேர்ந்த 40 வயதான நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர் என 8 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று குணம் அடைந்ததால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story