உதவுவதுபோல் ஏ.டி.எம். கார்டை பெற்று மோசடி: மூதாட்டியின் வங்கி கணக்கில் ரூ.36 ஆயிரம் எடுத்தவர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
உதவுவதுபோல் மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.36 ஆயிரம் எடுத்து மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் சிக்கினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கணேஷ்நகரை சேர்ந்த காளிமுத்துவின் மனைவி கனகம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று புதுக்கோட்டை டவுனில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த ஒருவர் அவருக்கு உதவி செய்வதாகவும், அவரிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று எந்திரத்தில் இருந்து பணம் எடுத்து தருவதாகவும் கூறினார்.
மேலும் ரகசிய குறியீடு எண்ணை கேட்டு அறிந்த அந்த நபர் பணம் எடுத்து கொடுத்த பின், தான் வைத்திருந்த போலி ஏ.டி.எம். கார்டை மூதாட்டியிடம் கொடுத்து அனுப்பினார். இதனை அறியாத கனகம்மாள் அந்த கார்டை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பினார். இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.36 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்த நபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டு போலியானது என்பதும் தெரியவந்தது.
ரூ.20 ஆயிரம் பறிமுதல்
இதுகுறித்து கனகம்மாள் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி செய்தது, ஆதனக்கோட்டை அருகே குப்பையம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story