திட்டக்குடி அருகே சோகம்: கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகன் சாவு


திட்டக்குடி அருகே சோகம்: கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகன் சாவு
x
தினத்தந்தி 14 Jun 2020 3:30 AM IST (Updated: 14 Jun 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகன் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட பகுதியில் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன. இதில் தண்ணீர் குட்டைபோல் தேங்கி நின்று வருகிறது. இந்த குட்டையில் ஆலம்பாடி கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் துணி துவைப்பது, குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேற்று மதியம் ஆலம்பாடியை சேர்ந்த சங்கர் மனைவி திவ்யா(வயது 27) என்பவர் தனது மகன் ஆரியனுடன் (8) குளிப்பதற்காக குட்டைக்கு சென்றார். திவ்யா துணியை துவைத்துக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் குட்டையின் உள்ளே இறங்கி குளித்த ஆரியன், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் தண்ணீரின் உள்ளே மூழ்கிய நிலையில் சிறுவன் தத்தளித்தான்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யா, உடனடியாக தண்ணீரில் இறங்கி தனது மகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அவரும் தண்ணீர் உள்ளே மூழ்கினார். இதையடுத்து திவ்யா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தகவலறிந்த ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் தாய், மகன் இருவரையும் பிணமாக கரைக்கு மீட்டு வந்தனர்.

அவர்களது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர். தொடர்ந்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த கல்குவாரி குட்டையில் மூழ்கி ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது, தாய், மகனின் உயிரை குவாரி பலிவாங்கி இருப்பது அந்த பகுதி மக்களை சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

Next Story