சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் விழுப்புரத்தில் தடுத்து நிறுத்தம் - கொரோனா பரவலை தடுக்க போலீசார் நடவடிக்கை


சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் விழுப்புரத்தில் தடுத்து நிறுத்தம் - கொரோனா பரவலை தடுக்க போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2020 3:45 AM IST (Updated: 14 Jun 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள், விழுப்புரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்க போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 5-ம் கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வருபவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை காட்டிலும் சென்னை பகுதியில் தங்கியிருந்து விழுப்புரம் வந்தவர்களாலும், கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியதாலும் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது.

இந்நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறபோதிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 50 பேர் வரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம் சென்னையில் கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு அதிகரித்து வரும் நோய் தொற்றினால் அதன் அச்சம் காரணமாக வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து வெளியேறி தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இவர்கள் கிடைத்த வாகனங்களில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக கலெக்டர் அலுவலகம் மூலம் தரப்படும் இ-பாசை போன்று போலி இ-பாஸ் தயாரித்து விற்பனை செய்யும் புரோக்கர்களிடம் இருந்து பெற்று சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இன்னும் சிலர் சென்னையில் இருந்து பிரதான சாலைகளில் வராமல் கிராமம், கிராமமாக புகுந்து சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறு சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு திரும்புபவர்களால் பாதுகாப்பாக இருக்கிற சில மாவட்டங்களிலும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகளான கெங்கராம்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு, மணம்பூண்டி, ஆனத்தூர், மடப்பட்டு, பனையபுரம், ஓங்கூர், வெள்ளிமேடுபேட்டை, மேல்பாப்பாம்பாடி, ஞானோதயம், மழவந்தாங்கல் கூட்டுசாலை, பட்டானூர் சோதனைச்சாவடி, தாழங்காடு ஆகிய 13 இடங்களில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 15 போலீசார் 12 மணி நேரத்திற்கு ஒருமுறை என சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ‘பேரிகார்டு மூலம்’ தடுப்பு அமைத்து, சென்னை மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் வரும் வாகனங்களை மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேலும் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் வழுதரெட்டி சந்திப்பிலும், செஞ்சி சாலை சந்திப்பிலும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் புறவழிச்சாலையிலும், முத்தாம்பாளையம் சந்திப்பிலும், விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் மாம்பழப்பட்டு ரெயில்வே கேட் அருகில் உள்ள சாலையையும், அதுபோல் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் கோலியனூர் கூட்டுசாலையிலும் இதுதவிர மாவட்டத்தின் பிரதான சாலைகளிலும் தடுப்புக்கட்டைகள் அமைத்து சாலைகளை மூடியுள்ளனர்.

இந்த சாலைகளில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்களை மட்டுமே மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கின்றனர். அதுபோல் மருத்துவம், திருமணம், இறப்பு ஆகிய நிகழ்வுகளுக்காக இ-பாசுடன் செல்பவர்களையும் அனுமதித்து வருகின்றனர். பிற தேவைகளுக்காக இ-பாசுடன் வருபவர்களையும், இ-பாஸ் இல்லாமல் வருபவர்களையும் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதி மறுத்து அவர்களை போலீசார் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைத்து வருகின்றனர்.

Next Story