திட்டக்குடி,, வெலிங்டன் நீர்த்தேக்க கரை உள்வாங்கியதால் பரபரப்பு
திட்டக்குடியில் வெலிங்டன் நீர்த்தேக்க கரையில் அமைக்கப்பட்டு உள்ள சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி,
திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்ச்செருவாயில் வெலிங்டன் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த ஏரி 1922-ம் ஆண்டு முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டது. நீர் பிடிப்பு பரப்பு 16.6 சதுர கிலோ மீட்டரை கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் உச்ச நீர்மட்டம் 29.72 அடி ஆகும். இதன் மூலம் 67 கிராமங்களில் உள்ள 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு விரிசல் அடைந்த போது ரூ.29 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கரை சீரமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து 2017-ம் ஆண்டு மீண்டும் கரையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2018-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 80 லட்சத்தில் கரை பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கரையின் அருகே போடப்பட்டுள்ள தார்சாலையில் திடீரென சில இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு உள் வாங்கிய நிலையில் காணப்பட்டது. இதுபற்றி அறிந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜன், நீர்த்தேக்கத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, உதவி பொறியாளர்கள் சோழராஜா, பாஸ்கர் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் தார்சாலையில் வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய பகுதியை உடனடியாக சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதற்கென உள்வாங்கிய பகுதியில் பள்ளம் தோண்டி அதில் தேவையான மணல், ஜல்லி கற்கள் உள்ளிட்டவற்றை கொட்டி சீரமைப்பு பணி செய்தனர். இது சாதாரண ஒரு வெடிப்பு தான், விவசாயிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் இந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story