திண்டுக்கல் அருகே, நடத்தை சந்தேகத்தால்: தலையில் கல்லை போட்டு மனைவி கொலை - ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு


திண்டுக்கல் அருகே, நடத்தை சந்தேகத்தால்: தலையில் கல்லை போட்டு மனைவி கொலை - ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Jun 2020 7:39 AM IST (Updated: 14 Jun 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தலையில் கல்லை போட்டு மனைவியை கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செம்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த வண்ணம்பட்டி அருகே உள்ள வெள்ளைமாலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி காலாம்மாள் என்ற லட்சுமி (38). இவர்களுக்கு நாகராஜ் (18), முத்துக்குமார் (16) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் லட்சுமியின் நடத்தையில் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாகவே கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீரக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரக்கல்லில் இருவரையும் ஊர் மக்கள் சமாதானம் செய்து வைத்தனர். அதையடுத்து இருவரும் மீண்டும் வெள்ளைமாலைப்பட்டிக்கு வந்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அக்கம்பக்கத்தினர் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத முருகன் நேற்று அதிகாலை, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த லட்சுமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் லட்சுமியால் சத்தம் எழுப்ப கூட இயலவில்லை. இதற்கிடையே காலையில் அவருடைய 2 மகன்களும் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த போது, ரத்த வெள்ளத்தில் தாய் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, லட்சுமியின் தலையில் கல்லை போட்டு முருகன் கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதுகுறித்து செம்பட்டி போலீசுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story