கூடலூர் அருகே, வனச்சரக அலுவலகத்தை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்


கூடலூர் அருகே, வனச்சரக அலுவலகத்தை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்
x
தினத்தந்தி 14 Jun 2020 3:45 AM IST (Updated: 14 Jun 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வனச்சரக அலுவலகத்தை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.

கூடலூர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஓவேலி வனச்சரக அலுவலகம், பார்வுட் பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்தை நேற்று முன்தினம் காட்டுயானை ஒன்று முற்றுகையிட்டது. உடனே பணியில் இருந்த வன ஊழியர்கள் பட்டாசு வெடித்து காட்டுயானையை விரட்ட முயன்றனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த காட்டுயானை, வனச்சரக அலுவலக பின்பக்க சுவரை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் மேற்கூரையில் வேயப்பட்டு இருந்த ஓடுகளை பிரித்து வீசியது. உடனே கூடுதல் வனக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உதவியுடன் காட்டுயானை விரட்டியடிக்கப்பட்டது.

இதேபோன்று எல்லமலை பகுதிக்குள் புகுந்த மற்றொரு காட்டுயானை, சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த குஞ்சு முகமது என்பவரது ஜீப்பை சேதப்படுத்தியது. மேலும் முன்டக்குன்னு பகுதிக்குள் வேறொரு காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களை தின்று சேதப்படுத்தியது. இதில் மாதவன் என்பவரது 150 வாழைகள் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேவாலா வனத்துறையினர், காட்டுயானையை விரட்டியடித்தனர். அப்போது காட்டுயானை சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். இது தவிர அய்யன்கொல்லி, மூலைக்கடை, கோட்டப்பாடி ஆகிய பகுதிகளுக்குள் புகுந்த காட்டுயானைகள் மின்கம்பங்களை சாய்த்து அட்டகாசம் செய்தன.

Next Story