திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் இறந்ததால் பரபரப்பு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி வளாகத்தில் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, நொட்டம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(வயது 29). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மணியம்மாள்(23). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. பின்னர் இவர்கள் இருவரும் திருப்பூர் கே.வி.ஆர். நகரில் வசித்து வந்தனர். மணியம்மாள் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மணியம்மாள் கர்ப்பமானார். கடந்த 11-ந்தேதி பிரசவத்துக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மணியம்மாளை சேர்த்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் மணியம்மாளுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் இருந்தனர். இதுகுறித்து ஊரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் புறப்பட்டு திருப்பூருக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணியம்மாளுக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இரவு 9.30 மணி அளவில் இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மணியம்மாளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மணியம்மாளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்து விட்டதாக அரசு டாக்டர்கள் மீது குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் மணியம்மாள் இறந்து விட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் நேற்று காலை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மணியம்மாளின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மணியம்மாளின் குழந்தையை உறவினர்கள் கையில் ஏந்தியபடி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார், தெற்கு தாசில்தார் சுந்தரம் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மணியம்மாளுக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சினையால் அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தும் அவர் இறந்து விட்டதாகவும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
இதுகுறித்து புகார் தெரிவித்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் சமாதானம் அடைந்து மணியம்மாளின் உடலை பெற்று உறவினர்கள் கிளம்பினார்கள்.
இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் சாந்தியிடம் கேட்டபோது, மணியம்மாளுக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சினையால் அதிகப்படியான ரத்தப்போக்கு இருந்தது. ஒருகட்டத்தில் கர்ப்பப்பையை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும் அவர் இறந்து விட்டார். டாக்டர்கள் போராடி பார்த்தும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது என்றார்.
Related Tags :
Next Story