சென்னையில் இருந்து மதுரை வந்த 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யவில்லையா?


சென்னையில் இருந்து மதுரை வந்த 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யவில்லையா?
x
தினத்தந்தி 14 Jun 2020 12:22 PM IST (Updated: 14 Jun 2020 12:22 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து மதுரை வந்த 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாததே மதுரையில் கொரோனா வேகமாக பரவ காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை,

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையிலும் சில நாட்களுக்கு முன்பு வரை 1, 2 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 20, 30 என பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களின் மூலமே தற்போது மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தவிர சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலமே மதுரையை சேர்ந்த பலரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்பது வேதனையான உண்மையாக இருக்கிறது.

மதுரையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 10 பேர் சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.

இதே நிலையில்தான் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் உள்ளன.

ஏறக்குறைய பச்சை மண்டலமாக சிவகங்கை மாறிவிட்டது என்று கூறப்படும் அளவுக்கு பல நாட்களாக அங்கு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் மும்பை, சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் அந்த மாவட்டத்திலும் தற்போது கொரோனா வேகம் எடுத்துள்ளது.

சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து விமானம், ரெயில், கார் மூலமாக இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மதுரைக்கு வந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தவித பரிசோதனையும் செய்யப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

வெளி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு கார், ரெயில் மூலம் வருகின்ற நபர்களுக்கு எந்தவித பரிசோதனையும் செய்யாமல் மாவட்டத்திற்குள் அனுமதித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதான் இப்போது கொரோனா பாதிப்பு அதிகமாக காரணம் என்றும் கூறப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஒரு சிலரை மட்டுமே கண்துடைப்புக்காக முகாம்களில் வைத்து சுகாதாரத்துறையினர் பராமரித்து வருகின்றனர். மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர்.

மாவட்ட எல்லைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை வருகின்ற நபர்களில் 90 சதவீதம் பேரை, வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என கூறி அவர்களின் உடல் வெப்பநிலையை மட்டும் பரிசோதித்து விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இதனால் அந்த நபர்கள் மூலம் அவர்களது குடும்ப நபர்கள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என சங்கிலி தொடர் போல இந்த கொரோனா பரவி வருகிறது.

தற்போது வரை, விமானத்தில் வரும் நபர்களுக்கு மட்டுமே மதுரை விமான நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதுதவிர மாவட்ட எல்லைகள் மற்றும் ரெயில் நிலையங்களில் வரும் வெளி மாவட்ட நபர்களுக்கு எந்தவித பரிசோதனையும் செய்யப்படுவதில்லை. எனவே வெளி மாவட்டத்தில் இருந்து ரெயில்கள் மூலமாகவும், கார் மூலமாகவும் மதுரைக்கு வரும் அனைத்து நபர்களுக்கும் கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும்.

மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனை செய்தால் மட்டுமே மதுரையில் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இதுபோல் கார்கள் மற்றும் ரெயில்களில் வரும் நபர்களுக்கு ரெயில் நிலையத்திலும், மாவட்ட எல்லைகளிலும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும்,

அவர்களை குறைந்த பட்சம் 7 நாட்களுக்கு மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் வைத்து தனிமைப்படுத்த வேண்டும். எந்தவித அறிகுறியும் இல்லை என கூறி வீட்டிற்கு அனுப்புவதால்தான் தொற்று மேலும் பலருக்கு பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் இந்த விஷயத்தில் முழு வீச்சோடு செயல்பட்டு மாவட்ட எல்லைகளில் வரும் அனைத்து நபர்களையும் கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும்.

வேகமாக கொரோனா பரவ காரணம் பற்றி அதிர்ச்சி தகவல்

Next Story