கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி - மதுரையில் உயிரிழப்பு 5-ஆக உயர்வு
மதுரையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலியானார். இதனால் உயிரிழப்பு 5-ஆக உயர்ந்தது.
மதுரை,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 56 வயது பெண். இவர் சென்னையில் வசித்து வந்தார். இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தார். அதன் பின்னர் அவர் மதுரையில் வசித்து வந்தார். இதற்கிடையே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருப்பதாக கூறி அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த 3-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.
இங்கு வந்த பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுபோல் சர்க்கரை நோய்க்கும், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் கிருமிநாசினி தெளித்து உரிய விதிகளின்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
ஏற்கனவே மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அண்ணா நகரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர், மேலமாசிவீதியை சேர்ந்த மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயார், கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த மூதாட்டி மற்றும் சொல்லூர் பகுதியை சேர்ந்த முதியவர் என 4 பேர் இறந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story