கொரோனா பீதி: குண்டாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுத்து பொதுமக்கள் போராட்டம் - பாதையை அடைத்து போலீஸ் பாதுகாப்பு
கொரோனா பீதியால் செங்கோட்டை குண்டாறு அணைக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அணைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
செங்கோட்டை,
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கண்ணுப்புள்ளிமெட்டு என்ற இடத்தில் குண்டாறு அணை அமைந்துள்ளது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலம் சீசன் தொடங்கி உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் குற்றாலம் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து, அங்கிருந்து குண்டாறு அணைக்கு படையெடுக்கின்றனர். இதற்காக ஏராளமான கார்களில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
பொதுமக்கள் போராட்டம்
இந்த நிலையில் செங்கோட்டை பகுதியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதற்கிடையே கொரோனா மேலும் பரவிவிடக்கூடாது என்பதற்காக வாடகை கார், ஜீப் டிரைவர்கள், படகு ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு குண்டாறு அணைக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் செங்கோட்டை தாசில்தார் கங்கா, குண்டாறு அணைக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் அணைக்கு செல்லும் பிரதான பாதையை அடைப்பதற்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் குண்டாறு அணைக்கு செல்லும் பாதை உடனடியாக அடைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீசாரும், வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குண்டாறு அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story