84 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நிலையில் குறைந்த அளவே இறால் சிக்கியதால் ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றம்
84 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்று திரும்பிய விசைப்படகுகளில் குறைந்த அளவே இறால் மீன்கள் கிடைத்ததால் ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேசுவரம்,
கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் தடைக்காலம் முடிந்து 84 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 700 விசைப்படகுகளில் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்த நிலையில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் நேற்று காலை கரை திரும்பினார்கள். ஆனால் மீனவர்கள் அதிகம் எதிர்பார்த்த இறால், சங்காயம், கணவாய் மீன்கள், நண்டு குறைந்த அளவிலேயே கிடைத்திருந்தன.
தடைக்காலம் முடிந்து 84 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்று வந்த ராமேசுவரம் மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வந்ததையொட்டி வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் துறைமுகம் மற்றும் அந்தோணியார் கோவில் கடற்கரை பகுதி மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா கூறியதாவது:-
ஊரடங்கு மற்றும் தடைக்காலம் முடிந்து 84 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்று வந்ததில் ஒவ்வொரு படகிலும் இறால் மீன்கள் 100 கிலோ முதல் 150 கிலோ வரை மட்டுமே கிடைத்துள்ளது. ஒரு சில படகுகளில் தான் 200 கிலோ இறால் கிடைத்துள்ளது. சங்காயம், கணவாய், நண்டு போன்ற மீன்களும் குறைவாகவே கிடைத்துள்ளன. எனவே இது ஏமாற்றமாக அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்று வந்த போது, ஒவ்வொரு படகிலும் இறால் மீன்கள் 300 கிலோ முதல் 500 கிலோ வரை கிடைத்தன. சங்காயம் உள்ளிட்ட மற்ற மீன்களும் அதிகஅளவில் கிடைத்தன.
ஆனால் இந்த ஆண்டு, 84 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்று வந்த போதிலும் இறால் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாகவே கடந்த சில மாதங்களாகவே வீசி வந்த காற்றின் வேகம் மற்றும் கடல் நீரோட்டத்தின் வேகத்தால் மீன்கள் இடம் பெயர்ந்திருக்கலாம். கடந்த 2 ஆண்டுகளாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இறால் மீன் குஞ்சுகளும் அதிக அளவில் கடலில் விடப்படாததும் இறால் மீன்கள் வரத்து குறைவுக்கு ஒரு காரணம்.
அனைத்து படகிலும் குறைவான இறால் மீன்கள் கிடைத்துள்ள போதிலும் இதுவரையிலும் மீனவர்கள் பிடித்து வந்த இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட எந்த மீன்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் தடை காலம் முடிந்து மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு உரியவிலை கிடைப்பதில்லை. எனவே இனியவாது மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு உரிய விலையை அரசே நிர்ணயம் செய்து நல்ல விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story