கட்டுப்பாட்டில் தளர்வு, சோதனையில் சோர்வு, சமூக இடைவெளி மாயம் மதுரையை மிரட்டும் கொரோனா
கட்டுப்பாட்டில் தளர்வு, சோதனையில் சோர்வு, சமூக இடைவெளி மாயம் போன்ற காரணங்களால் மதுரையை கொரோனா மிரட்டுகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு அதிகரிக்கிறது.
மதுரை,
மதுரையில் முதல் கொரோனா நோயாளி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி அடையாளம் காணப்பட்டார். ஆனால் அவர் 24-ந் தேதி சிகிச்சை பலனிக்காமல் மரணம் அடைந்தார். தமிழகத்திலேயே கொரோனாவால் மரணம் அடைந்த முதல் நபர் இவர் தான். அதற்கிடையில் கொரோனா பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்காரணமாக மதுரையிலும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டன. மார்ச் 30-ந் தேதியன்று மதுரையில் மொத்தம் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் ஏப்ரல் 1-ந் தேதி 9 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கையாக 15 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி, போலீசார் ஆகியோர் இணைந்து தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட தொடங்கினர்.
மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க தயிர் மார்க்கெட், கரிமேடு மீன் மார்க்கெடுகள் உள்பட பல மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. மாட்டுத்தாவணி மற்றும் பரவை மார்க்கெட்டுகள் பிரிக்கப்பட்டன. கீழமாசி வீதியில் மக்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது. மிக முக்கியமாக ஒரு பகுதியில் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டால் அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டது. இதன்போன்ற கெடுபிடிகளால் மதுரையில் கொரோனா மிக வேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தாலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 15-ந் தேதி 41 பேர், 30-ந் தேதி 84 பேர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன்பின் மே மாதத்தில் இருந்து ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. இந்த சமயத்தில் தான் பிற மாநிலத்தில் பணியாற்றி வந்த மதுரைவாசிகள் சிறப்பு ரெயில்கள் மூலம் ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகமானோர் மதுரைக்கு படையெடுத்தனர். இது போன்று வந்தவர்களால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மதுரையில் கிடு, கிடுவென உயர தொடங்கியது. மே மாதம் 15-ந் தேதி 132 பேரும், 30-ந் தேதி 249 பேர் என உயர்ந்தது.
ஜூன் மாத தொடக்கத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இ-பாஸ் மூலம் சொந்த ஊருக்கு திரும்பலாம் என்றும் அரசு அறிவித்தது. அதன்காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் மதுரைக்கு வர தொடங்கினர். அதில் விமானம் மற்றும் ரெயில் மூலம் வந்தவர்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். ஆனால் சாலை மார்க்கமாக இ-பாஸ் இல்லாமல் ஏராளமானோர் மதுரைக்கு வந்தனர். அனுமதியில்லாமல் வந்தவர்களால் மதுரையில் தற்போது கொரோனா மிக வேகமாக பரவுவது தெரியவந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி மதுரையில் மொத்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது. அதில் 88 பேர் பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆகும். ஆனால் சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை பராமரிக்காமல் கோட்டை விடப்பட்டுள்ளது. மதுரையின் நுழைவு வாயிலில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படாததால் எத்தனை பேர் இதுவரை மதுரைக்கு வந்தனர் என்ற தகவல்கள் இல்லை. இ-பாஸ் மூலம் வந்தவர்களின் விவரம் மட்டுமே மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது. சென்னையில் இருந்து அனுமதியின்றி வந்தவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே இதனை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் தற்போது மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அதாவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல.
அதுதவிர மாவட்டம் முழுவதும் கட்டுப்பாட்டில் தளர்வு செய்யப்பட்டதால் மக்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றனர். எங்கும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. குறிப்பாக மாட்டுத்தாவணி-பரவை மார்க்கெட், நெல்லைபேட்டை மீன் மார்க்கெட், கீழமாசி வீதி போன்றவற்றில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது. அதேபோல் இரவு 9 மணிக்கு மேல் ஊரடங்கு இருக்கிறது. ஆனால் 10 மணி ஆனாலும் நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது.
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அனுமதியற்று வந்தவர்களால் மதுரையில் கொரோனா பரவ அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்கு மதுரையும் வழிவகுத்து கொடுப்பது போல கட்டுப்பாட்டில் தளர்வு, சோதனையில் சோர்வு, சமூக இடைவெளி மாயமாகி விட்டதும் காரணமாகி விட்டது.
கொரோனாவின் ஆபத்தை மக்கள் நன்கு உணர்ந்து இனியாவது விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் மதுரையை கொரோனா வீழ்த்தும் நிலை வந்து விடும். எனவே அரசின் விதிமுறைப்படி பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவை வீழ்த்த வேண்டும்.
Related Tags :
Next Story