புதுவையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா


புதுவையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Jun 2020 5:22 AM IST (Updated: 15 Jun 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில் நீண்டநாட்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், வீமன் நகர், பீமன் நகர், கந்தசாமி நகர், வி.வி.பி. நகர், எல்.ஐ.சி. குடியிருப்பு, எல்லைப்பிள்ளைச்சாவடி, சின்ன கொசப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால், மாகியில் தலா ஒருவர் என மொத்தம் 18 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 13 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், தலா ஒருவர் காரைக்கால், மாகியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் குணமடைந்து 9 பேர் நேற்று வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 99 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதில் 61 பேர் கதிர்காமம் கொரோனா மருத்துவமனையிலும், 30 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 2 பேர் வெளி மாநிலங்களிலும் சிகிச்சையில் உள்ளனர். காரைக்காலில் 2 பேரும், மாகியில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இதுவரை மொத்தம் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,008 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9,636 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இதுவரை 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. வார இறுதி நாட்களில் மக்கள் அதிக அளவில் வெளியில் நடமாடுகின்றனர். இதனை குறைத்துக்கொள்ள வேண்டும். கடந்த 10 நாட்களாக கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தான் நோய் தொற்றின் வீரியம் அதிகமாகி வருகிறது. வரும் 30 நாட்கள் விரதம் போல நினைத்து பொதுமக்கள் சுய கட்டுப்பாடுகளை விதித்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும். வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story