மருத்துவ கல்வித்துறை சார்பில் பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க விதிமுறைகளில் திருத்தம் - மந்திரி சுதாகர் தகவல்
மருத்துவ கல்வித்துறை சார்பில் பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும் என்று மந்திரி சுதாகர் கூறினார்.
கலபுரகி,
மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் கலபுரகியில் நேற்று அரசு மருத்துவ கல்லூரியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அந்த மருத்துவமனை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சுதாகர் பேசும்போது கூறியதாவது:-
“கலபுரகி அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும். இந்த பிரிவுக்கு தேவையான டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காந்தி ஜெயந்தி
வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்த விபத்து சிகிச்சை பிரிவை திறக்க வேண்டும். இந்த மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 16 பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும். அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமன பணிகள் தாமதமாகின்றன.
இதனால் மருத்துவ கல்வித்துறை மூலம் பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும். இல்லாவிட்டால் பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்புவது கடினமாகிவிடும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் வருகையை பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
கட்டமைப்பு பணிகள்
நிதி விஷயங்களை கவனிக்கும் அதிகாரி பணியிடம் காலியாக இருக்கக்கூடாது. மற்றவர் மீது கூடுதல் சுமையை சுமத்தக்கூடாது. அந்த நிதி அதிகாரி பணியிடத்தை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் மருத்துவமனையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சரியாக பணியாற்றாத துப்புரவு பணியாளர்களை ஏன் பணியில் வைத்துள்ளர்கள். உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு ஏன் அத்தகைய பணி வாய்ப்பு வழங்கவில்லை. கருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு கட்டமைப்பு பணிகள் குறித்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. ஒப்பந்த பணியாளர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமான சிகிச்சை
61 செவிலியர் பணியிடங்களை மருத்துவ கல்வித்துறைக்கு ஒதுக்குவது குறித்து சுகாதாரத்துறையிடம் பேசுகிறேன். மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது மக்கள் பிரதிநிதிகளின் நோக்கம். இதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மருத்துவ கல்லூரி மேலும் வளர வேண்டும் என்றால் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். நல்ல பணிகளை நான் எப்போதும் ஆதரிக்க தயாராக உள்ளேன்.”
இவ்வாறு சுதாகர் கூறினார்.
கூட்டத்தில் உமேஷ் ஜாதவ் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story