செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று கிடுகிடுவென உயர்வு - ஒரே நாளில் 178 பேருக்கு பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று கிடுகிடுவென உயர்வு - ஒரே நாளில் 178 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2020 2:04 AM GMT (Updated: 15 Jun 2020 2:04 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 178 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஊரப்பாக்கம் கணபதி நகர் முதல் தெருவில் வசிக்கும் 26 வயது இளம்பெண், ராஜீவ்காந்தி நகரில் வசிக்கும் 68 வயது முதியவர், கந்தன் தெருவை சேர்ந்த 34 வயது வாலிபர், வண்டலூர் புது ஓட்டேரி 2வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 34 வயது இளம்பெண், நந்திவரம் டிபன்ஸ் காலனி 5வது தெருவில் வசிக்கும் 75 வயது முதியவர், நந்தீஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்த 74 வயது மூதாட்டி, 29 வயது இளம்பெண், கூடுவாஞ்சேரி வள்ளலார் நகர், வினாயகர் கோவில் தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர், வீரபாகு தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறுமி, 30 வயது இளம்பெண், மகாலட்சுமி நகர் 2வது தெருவை சேர்ந்த 53 வயது பெண் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வள்ளல் சீத்தாகாதி நகர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண், என்.எச்.1, பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 44 வயது பெண், 25 வயது வாலிபர், அஷ்டலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 53 வயது பெண், காட்டாங்கொளத்தூர் கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் 28 வயது இளம்பெண் உள்பட 6 பேர் பாதிக்கப்பட்டனர்.

சிங்கப்பெருமாள் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கீழக்கரணை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 10 வயது சிறுமி உள்பட 8 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வேங்கடமங்கலம் பொன்னியம்மன் நகர் பகுதியில் வசிக்கும் 46 வயது ஆண், ஊனமாஞ்சேரி சந்திராபுரம் 2வது தெருவில் வசிக்கும் 43 வயது ஆண் ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் சேர்த்து நேற்று ஒரே நாளில் 178 பேருக்கு கொரோனா உறுதியானது.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,882 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,225 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 55 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை அருகே உள்ள மாத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே அறையில் வசித்து வந்த 4 வாலிபர்கள், படப்பை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயது ஆண், கரசங்கால் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 709 ஆனது. இவர்களில் 411 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 291 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,865 ஆனது. இவர்களில் 855 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 988 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 22 பேர் உயிரிழந்தனர்.

Next Story