கள்ளக்குறிச்சி, உழவர் சந்தை மீண்டும் அரசு பள்ளி மைதானத்துக்கு மாற்றம்


கள்ளக்குறிச்சி, உழவர் சந்தை மீண்டும் அரசு பள்ளி மைதானத்துக்கு மாற்றம்
x
தினத்தந்தி 15 Jun 2020 10:29 AM IST (Updated: 15 Jun 2020 10:29 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி தற்காலிக உழவர் சந்தை மீண்டும் அரசு பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் உழவர் சந்தை இயங்கி வந்தது. இங்கு கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களில் விளைந்த பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து உழவர் சந்தை மூடப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு காய்கறிகள் தடையின்றி கிடைத்திடும் வகையில் உழவர் சந்தை தற்காலிகமாக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பொருட்கள் விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

இதனால் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த தற்காலிக உழவர் சந்தை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு காரணமாக பள்ளி மைதானத்தில் இயங்கி வந்த உழவர் சந்தை கள்ளக்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு போதுமான இடவசதி இல்லை. இதனால் விவசாயிகள் தங்களது விளைபொருட்கள் அங்கு வைத்து விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமமடைந்து வந்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் போதுமான இடவசதி இல்லாததால், இங்கு காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தான் அரசு பள்ளி மையதானத்தில் இயங்கி வந்த உழவர் சந்தையை, மாவட்ட நிர்வாகம் இங்கு மாற்றியது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது.

எனவே தற்காலிக உழவர் சந்தையை மீண்டும் அரசு பள்ளி மைதானத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தற்காலிக உழவர் சந்தையை மீண்டும் அரசு பள்ளி மைதானத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி அரசு பள்ளி மைதானத்தில் நேற்று முதல் மீண்டும் தற்காலிக உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.

Next Story