சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவில் மதில் சுவர் கட்ட ரூ.1½ கோடி ஒதுக்கீடு எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தகவல்


சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவில் மதில் சுவர் கட்ட ரூ.1½ கோடி ஒதுக்கீடு எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2020 10:52 AM IST (Updated: 15 Jun 2020 10:52 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவிலில் மதில் சுவர் கட்ட ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

சத்தியமங்கலம்,

பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலம் புதிய பாலம் அருகே பவானி ஆற்றின் கரையில் மிகவும் பழமையான பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோவிலில் கட்டப்பட்டிருந்த மதில் சுவர் 20 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதனால் கோவிலை பக்தர்கள் வலம் வர முடியாத நிலை ஏற்பட்டதுடன், சப்பரம் எடுத்து சுற்றி வர முடியாத நிலையும் உண்டானது.

இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து கோவிலுக்கு மதில் சுவர் கட்ட ரூ.53 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். இதைத்தொடர்ந்து மதில் சுவர் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பவானி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் மதில் சுவர் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி கோவிலில் ஏற்கனவே உடைந்து சேதம் அடைந்த மதில் சுவரை ஒட்டி 60 அடி நீளத்துக்கு மதில் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதுபற்றி கோவில் நிர்வாக அதிகாரி சித்ரா, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னையில் இருந்து பவானீஸ்வரர் கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இதுகுறித்து பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற பவானீஸ்வரர் கோவில் உள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோவிலின் மதில் சுவர் இடிந்து பெரும் சேதமடைந்தது. மேலும் மதில் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த 63 நாயன்மார்கள் சிலையும் ஆற்றில் சரிந்து விழுந்தது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் விளக்கி கூறியதுடன், கோவில் பகுதியை செப்பனிட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தேன். அதன் அடிப்படையில் கோவிலில் மதில் சுவர் கட்டவும், நாயன்மார் சிலைகள் அமைக்கவும் மற்றும் கோவில் திருப்பணிக்காகவும் அறநிலையத்துறை சார்பில் ரூ.1 கோடியே 58 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பவானீஸ்வரர் கோவிலில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது,’ என்றார்.

Next Story