தனிநபர் இடைவெளியின்றி உக்கடம் மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்


தனிநபர் இடைவெளியின்றி உக்கடம் மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 Jun 2020 11:45 AM IST (Updated: 15 Jun 2020 11:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டில் தனிநபர் இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்தனர்.

கோவை,

கோவைக்கு கேரளா மற்றும் தூத்துக்குடி, ராமேசுவரம், கடலூர் போன்ற தமிழகத்தின் மற்ற ஊர்களில் இருந்து மீன்கள் வேன்களில் கொண்டு வரப்படுகின்றன. அந்த மீன்கள் அனைத்தும் கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அதன் பின்னர் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள சில்லரை கடைகளுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

மேலும் சைக்கிள்களில் வைத்து வியாபாரம் செய்பவர்களும் மீன்களை வீடு வீடாக கொண்டு சென்று விற்று வருகிறார்கள். தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக்ககவசம் மற்றும் தனி நபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோவையில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பொருட்களை வாங்க அதிக அளவில் வரும் பொதுமக்கள் கொரோனா தொற்று முன்எச்சரிக்கை நடைமுறைகளை காற்றில் பறக்க விடுகின்றனர். கோவை உக்கடத்தில் உள்ள மொத்த மீன் மார்கெட்டுக்கு மீன் வாங்க நேற்றுக்காலை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதனால் உக்கடம் லாரிபேட்டையில் இருந்து மொத்த மீன் மார்க்கெட்டுக்கு செல்லும் சாலையில் மக்கள் முண்டியடித்து நடந்து வந்தனர். இதே போல இரு சக்கர வாகனங்ககள் நிறுத்தும் இடங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு வந்தவர்களில் சிலர் முகக்கவசம் அணிந்திருந்தனர். சிலர் அணியவில்லை. ஆனால் எவரும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவில்லை.

மீன் மொத்த மார்க்கெட்டின் உள்ளேயும் மீன் வாங்க வந்தவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தார்களே தவிர தனிநபர் இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை. சில கடைகளில் மக்கள் கூட்டமாக நின்று மீன்களை வாங்கியதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மீன் கடைகளில் தனி நபர் இடைவெளி பின்பற்றவில்லை என்ற காரணத்தினால் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்கடம் சில்லரை மீன் மார்க்கெட் மூடப்பட்டது. அதுபோன்ற நிலைமை மொத்த மீன் மார்க்கெட்டுக்கும் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறோம். கொரோனா தொற்றின் வீரியத்தை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒரு கடையில் கூட்டம் அதிகமாக இருந்தால் மற்றொரு கடைக்கு சென்று வாங்கலாம். அல்லது கூட்டம் குறையும் வரை காத்திருந்து அதன் பின்னர் மீன்களை வாங்கிச் செல்லலாம். மீன் மார்க்கெட்டில் இதே நிலை நீடித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். தீவிர நடவடிக்கை காரணமாக இறைச்சி கடைகளில் முன்பு போல கூட்டம் அதிகமாக காணப்படுவதில்லை. இறைச்சிக்கடைகளுக்கு வருபவர்கள் தனிநபர் இடைவெளி விட்டு நின்று வாங்கிச் செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story