ஊரடங்கால் முடங்கிப்போன கைத்தறி நெசவு தொழில்: சிறுமுகையில் ரூ.15 கோடி பட்டுப்புடவைகள் தேக்கம் - உற்பத்தி விலைக்கே விற்க முடிவு
ஊரடங்கு காரணமாக சிறுமுகையில் கைத்தறி நெசவு தொழில் முடங்கி உள்ளது. இதனால் ரூ.15 கோடி பட்டுப்புடவைகள் தேக்கம் அடைந்து உள்ளன. எனவே உற்பத்தி விலைக்கே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வட்டாரப்பகுதி கைத்தறி நெசவு தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரம் நெசவு தொழிலாளர் குடும்பங்கள் நெசவு தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி என்ற கவிஞரின் அழகிய வரிகளுக்கு ஏற்ப மின்னிக் கண்ணைப்பறிக்கும் கைத்தறி புடவைகள் தயாரிப்பதில் சிறுமுகை பகுதி தனி முத்திரை பதித்து வருகிறது. நெசவு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறுமுகை வட்டார பகுதியில் 19-க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் உள்ளன.
சிறுமுகையில் கோரா, மென்பட்டுப்புடவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் மென் பட்டுப்புடவைகள் பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கைத்தறி பட்டுப் புடவைகள் தயாரிப்பதற்கு கர்நாடகாவில் இருந்து பட்டும், சூரத்தில் இருந்து ஜரிகையும் வந்து கொண்டிருந்தது. இதை கொண்டு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் கொடுக்கும் பாவுப்பட்டு, ஊடைப்பட்டு ஆகியவற்றை கொண்டு நெசவாளர்கள் கைத்தறி பட்டுப்புடவைகளை நெய்து வந்தனர்.
கைத்தறியில் ஒரு புடவை நெய்வதற்கு 3 பேர் அதாவது குடும்பத்தில் உள்ள அனைவரும் இரவு பகலாக பாடுபட வேண்டும். ஒரு புடவை தயாரிக்க அதன் வடிவமைப்பைக் கொண்டு 2 அல்லது 3 நாட்கள் ஆகும். ஒரு புடவைக்கு கூலியாக ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 வரை கிடைக்கும். அதுபோல் மாதத்துக்கு 10 அல்லது 15 புடவைகளை நெய்யும்போது ரூ.15,000 வரை கூலி கிடைத்து வந்தது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்கள் தயாரிக்கும் கோரா, மென்பட்டுப்புடவைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்களில் விற்பனை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் கைத்தறி பட்டுப்புடவைகளை கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் கொள்முதல் செய்து தங்களது மாநிலங்களிலுள்ள ஷோரூம்களில் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு நாடு முழுவதும் சிறுமுகை கைத்தறி பட்டுப்புடவைகள் தனிச்சிறப்பு பெற்று பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விளங்கி வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு அறிவித்த கடந்த மார்ச் மாதம் முதல் சிறுமுகை வட்டார பகுதியில் கைத்தொழில் முடங்கி காணப்படுகிறது. நெசவுத் தொழி லாளர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது.
போக்குவரத்து வசதி பாதிக் கப்பட்டதால் கைத்தறி பட்டு புடவைகள் தயாரிக்க கர்நாடகாவில் இருந்து பட்டும், சூரத்தில் இருந்து ஜரிகையும், சிறுமுகை பகுதிக்கு வருவது முற்றிலும் நின்று போனது. மேலும் நெசவுத் தொழிலாளர்களுக்கு கைத்தறி பட்டுப்புடவைகள் தயாரிக்க பாவுப்பட்டு, ஊடைப்பட்டு ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்களும், தனியார் நிறுவனங்களும் வழங்க முன்வருவதில்லை.
ஏனென்றால் ஏற்கனவே தயாரித்த பட்டுப்புடவைகள் விற்பனையாகாமல் உள்ளதால் மேற்கொண்டு நெசவுத் தொழிலாளர்கள் கைத்தறி பட்டுப்புடவைகளை தயாரித்து வரும் நெசவுத் தொழிலாளர்களுக்கு உரிய கூலியை கொடுக்க முடியாமல் நிலை உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து யாரும் சிறுமுகை வந்து பட்டுப்புடவைகளை வாங்க முன்வராததால் பட்டுப் புடவைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.
இது குறித்து நெசவு தொழிலாளர்கள் கூறியதாவது:-
சிறுமுகை மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களில் 5 ஆயிரம் நெசவு தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் மாதத்துக்கு குறைந்தது 50 ஆயிரம் புடவைகளை உற்பத்தி செய்கிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து இதுவரை புடவைகள் உற்பத்தி செய்யவில்லை. ஏற்கனவே உற்பத்தி செய்து இருந்த ரூ.15 கோடியில் கோரா, மென்பட்டுப் புடவைகள் தேக்கம் அடைந்து உள்ளன.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நெசவுத் தொழிலாளர்களுக்கு அரசு முதல் மாதம் ரூ.1000 மற்றும் மூன்று மாதங்களுக்கு ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை வழங்கியது. மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் நெசவு தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் 10 சதவீத பேருக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மீதி 90 சதவீதம் பேருக்கு நிவாரண தொகை இன்னும் வழங்கப்படவில்லை.
மத்திய மாநில அரசுகளின் நிவாரண தொகை கிடைக்குமா என்று நெசவுத் தொழிலாளர்கள் வழிமேல் விழி வைத்து காத்து நிற்கின்றனர். கண்ணைக் கவரும் பல வண்ணங்களில் கைத்தறி பட்டுப்புடவைகளை நெய்த நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை தற்போது வண்ணமயமாக இல்லை.
கைத்தறி தொழில் தவிர மாற்று தொழில் எதுவும் தெரியாததால் கேள்விக்குறியான தங்களது வாழ்க்கையை எண்ணி வாழும் நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே நலிவடைந்து வரும் நெசவுத் தொழிலை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கிடையே, கைத்தறி பட்டுப்புடவை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குமார், பொருளாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார். அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் இனாயத்துல்லா, துணை செயலாளர் ராமசாமி, பொருளாளர் சுப்பிரமணி, செயலாளர் தாமஸ் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில், உற்பத்தி விலைக்கு விற்பது என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதால், கைத்தறி பட்டுப்புடவைகளை உற்பத்தி விலைக்கே வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதல் பட்டுப்புடவை விற்பனையை தலைவர் நாகராஜ் தொடங்கி வைக்க கீர்த்தனா என்பவர் பெற்றுக்கொண்டார். இந்த விற்பனை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story