சேலத்தில் டாக்டர், அரசு அதிகாரிகளின் வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலிடம் 100 பவுன் நகை மீட்பு
சேலத்தில் டாக்டர், அரசு அதிகாரிகளின் வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலிடம் இருந்து 100 பவுன் நகை மீட்கப்பட்டது.
சேலம்,
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன். கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 31½ பவுன் நகை ரூ.85 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் சேலம் மாநகராட்சி பொறியாளர் அசோகன் என்பவரது வீட்டில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி 35 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சேலம் நரசோதிபட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வரும் இவரது வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி 4 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் திருட்டு போனது. இதேபோல் முல்லை நகர் பகுதியில் வசித்து வரும் ரெயில்வே அதிகாரி பசுபதி வீட்டில் இருந்து 44 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர் செந்தில், உதவி கமிஷனர் பூபதிராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். தனிப்படையினர் திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 28), அன்பு மணிகண்டன் (19) என்பதும், அவர்கள் சேலத்தில் டாக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் வீடுகளில் திருடியதும் தெரியவந்தது.
மேலும் இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி பகுதியை சேர்ந்த முத்துராஜ் (32) என்பவர் செயல்பட்டுள்ளார். இவர் ஈரோடு போலீசாரால் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும், அவர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அன்பு மணிகண்டன், மகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 2 பேரையும் சூரமங்கலம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வாழப்பாடியில் தங்கியிருந்து சேலத்தில் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து திருடிய நகைகளை உருக்கி தங்க காசுகளாக வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான 100 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். கொள்ளை கும்பலை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பாராட்டினார்.
Related Tags :
Next Story