மாநிலத்தில் பாதிப்பு 200-ஐ தாண்டியது: பி.ஆர்.டி.சி. டிரைவர் உள்பட 8 பேருக்கு கொரோனா


மாநிலத்தில் பாதிப்பு 200-ஐ தாண்டியது: பி.ஆர்.டி.சி. டிரைவர் உள்பட 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Jun 2020 5:16 AM IST (Updated: 16 Jun 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி. டிரைவர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்களை சேர்த்து தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 202 ஆனது. சிகிச்சை முடிந்து குணமடைந்து நேற்று 4 பேர் வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 95 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மீதமுள்ள 103 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 66 பேர் இந்திராகாந்தி அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், 29 பேர் ஜிப்மரிலும், டெல்லி, சென்னையில் புதுச்சேரியைச் சேர்ந்த தலா ஒருவரும், காரைக்காலில் 2 பேரும், மாகியில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுக்கு மாகி, முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 10,321 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 9,872 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 243 பேருக்கு முடிவுகள் வரவேண்டிஉள்ளது.

சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் நேற்று 8 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் காலாப்பட்டு, சண்முகாபுரம், தர்மாபுரி, சேத்திலால்நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் 7 வயது சிறுமி, 70 வயது மூதாட்டி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப சென்னைக்கு பஸ்சில் அழைத்துச் சென்ற புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) ஓட்டுனர் ஆகியோரும் அடங்குவர்.

கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் கண்டிப்பாக தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. இதையும் மீறி அலட்சியமாக இருந்தால் தொற்று பாதிப்பு அதிகமாகும். எனவே தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்த்து எச்சரிக்கையாக வீடுகளிலேயே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காரைக்கால் மாவட்டம் நிரவி வள்ளுவன் தெருவில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த 12-ந் தேதி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், நிரவியில் உள்ள 4 பேர், சென்னையை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 12 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில், 57 வயதுடைய ஒருவர், 31 வயதுள்ள அவரது மகன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நிரவி வள்ளுவர் தெருவில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே செல்ல முடியாதபடி தெருவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

புதுவை மேட்டுப்பாளையத்தில் முக கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்த தொழிற்சாலையின் உரிமையாளருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் புதுவை மாநில பா.ஜனதா கட்சி செயலாளராகவும் உள்ளார். தற்போது அவரும் சிகிச்சைக்காக கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரத்தை சுகாதாரத்துறையிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அதில் பா.ஜனதா நிர்வாகிகள் சிலரும் அடங்குவர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதையடுத்து பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதன் காரணமாக பா.ஜனதா கட்சியினர் பீதியில் உள்ளனர்.

Next Story