பெரிய மார்க்கெட்டில் இருந்து ஏ.எப்.டி. மைதானத்துக்கு கடைகளை மாற்ற முடியாது - காய்கறி வியாபாரிகள் திட்டவட்டம்


பெரிய மார்க்கெட்டில் இருந்து ஏ.எப்.டி. மைதானத்துக்கு கடைகளை மாற்ற முடியாது - காய்கறி வியாபாரிகள் திட்டவட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2020 5:21 AM IST (Updated: 16 Jun 2020 5:21 AM IST)
t-max-icont-min-icon

பெரிய மார்க்கெட்டில் இருந்து ஏ.எப்.டி. மைதானத்துக்கு காய்கறி கடைகள் மாற்றப்படுவதை ஏற்க மாட்டோம். அங்கு கடைகள் போட முடியாது என்று வியாபாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மிகச்சிறிய இடத்தில் செயல்பட்டு வந்த பெரிய மார்க்கெட் கடந்த ஏப்ரல் மாதம் புதிய பஸ் நிலையம், லாஸ்பேட்டை உள்பட 5 இடங்களில் பிரித்து விடப்பட்டு தற்காலிகமாக இயங்கி வந்தது. அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் பல்வேறு தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கடந்த 3-ந்தேதி முதல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு கடைகள் மாற்றப்பட்டன. அங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களும், வியாபாரிகளும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் முகக்கவசம் அணியாமலும் தாராளமாக பெரிய மார்க்கெட்டுக்கு வந்து செல்வதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டதுடன் ஊரடங்கு விதிகளை பின்பற்றுமாறு வியாபாரிகளை எச்சரித்தனர்.

ஆனால் அதன்பிறகும் புகார்கள் வந்ததையடுத்து பெரிய மார்க்கெட்டில் இருந்து காய்கறி கடைகளை மட்டும் இடமாற்றம் செய்வது என முடிவு எடுத்து அதற்கான பணிகளை அரசு மேற்கொண்டது. இதற்காக கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மைதானம் தயார்படுத்தப்பட்டது. இதற்கிடையே கடைகளை மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் நாளை (புதன்கிழமை) முதல் பெரிய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் ஏ.எப்.டி. மைதானத்துக்கு மாற்றப்படுவதாக கலெக்டர் அருண் அதிரடியாக உத்தரவிட்டார். இந்த அறிவிப்புக்கு வியாபாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று காலை அங்கு ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில், ‘பெரிய மார்க்கெட்டில் இயங்கி வரும் காய்கறி கடைகளை கண்டிப்பாக வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது. மார்க்கெட்டின் 12 நுழைவு வாயில்களிலும் கிருமிநாசினி தெளித்து சமூக இடைவெளியை பின்பற்றுவோம். அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்து தான் காய்கறிகள் வாங்க வரவேண்டும் என்று அறிவுறுத்துவோம். கடைகளை ஏ.எப்.டி. மைதானத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது. வியாபாரிகளை கலந்து ஆலோசிக்காமல் கலெக்டர் அறிவித்துள்ள இந்த முடிவை ஏற்க மாட்டோம். இதையும் மீறி இடமாற்றம் செய்ய சொன்னால் கடைகளை அடைத்து விட்டு வீடுகளில் இருப்போம்’ என்று முடிவு செய்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, ‘புதுவை பெரிய மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளை ஏ.எப்.டி. மைதானத்திற்கு மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரிய மார்க்கெட்டில் மக்கள் அதிக அளவில் வருவதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல நிலைமை ஆகிவிடக் கூடாது. அப்படி நடந்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. பொதுமக்களின் உயிர் தான் முக்கியம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு சார்பில் வியாபாரிகளை அழைத்துப்பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

பழைய சிறை வளாகத்தில் மாற்ற திட்டம்?
பெரிய மார்க்கெட் காய்கறி கடைகளை மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கலெக்டர் அருண் கூறியதாவது:-

புதுவை ஏ.எப்.டி. மைதானத்துக்கு காய்கறி கடைகளை மாற்ற கூடுதல் கால அவகாசமும், மறுபரிசீலனை செய்யவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே நேரு வீதியில் உள்ள சிறைச்சாலை வளாக காலியிடத்தில் காய்கறி கடைகளை தற்காலிகமாக அமைக்கலாமா? என்ற எண்ணமும் அரசுக்கு உள்ளது. அங்கு மார்க்கெட் அமைத்தால் அரசு சார்பில் ஒருசில அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக அரசிடமும், வியாபாரிகளிடமும் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story